ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்; வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள், பாதுகாப்பு பணியில் 1 லட்சம் பேர்

அரசியல் இந்தியா செய்திகள் தேர்தல் செய்திகள் 2024 நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

ஆந்திரா, ஒடிசா மாநில சட்டப்பேரவை தேர்தலுடன் 9 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 நாடாளுமன்ற தொகுதிகளில் நாளை 4ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் மட்டும் 26,550 துணை ராணுவத்தினர் உள்பட 1 லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ஆந்திர மாநிலத்தில் 25 நாடாளுமன்ற தொகுதிகள், 175 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் பணியில் 3 லட்சத்து 82 ஆயிரத்து 218 பேர் ஈடுபடுகின்றனர். தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மொத்தம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 145 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மாவோயிஸ்ட் தாக்கம் அதிகம் உள்ள அரக்கு, பாலேறு, ரம்பசோடவரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளிலும் மாலை 4 மணி வரையும், பாலகொண்டா, குரப்பாம், சாலூறு ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் மாலை 5 மணி வரையும் மட்டுமே வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இவை தவிர, தெலங்கானாவில் மொத்தமுள்ள 17 மக்களவைத் தொகுதிகள், உத்தர பிரதேசத்தில் 13, மகாராஷ்டிராவில் 11, மேற்குவங்கம், மத்திய பிரதேசத்தில் தலா 8, சட்டீஸ்கரில் 7, பீகாரில் 5, ஜார்கண்டில் 4 தொகுதிகள் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் தொகுதிக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
இதுவரை மூன்று கட்டங்களில் 283 ெதாகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், நாளை நடக்கும் 96 தொகுதிகளுடன் சேர்த்து 379 தொகுதிகளில் தேர்தல் நிறைவடைய உள்ளது. மீதமுள்ள தொகுதிகளில் வரும் 20, 25, ஜூன் 1ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். அதன்பின் ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *