“தாய்ப்பாலும் போதை தரும், சாராயம் போதை தரும் ரெண்டையும் பிரித்தறிய புத்தி இல்லை”
இந்த சினமா பாடலை நீங்க கேட்டிருப்பீங்க, இன்னைக்கு இந்த சமூகம் சாராயத்தை தாண்டிய போதையை தேடிச் சென்றுகொண்டிருக்கிறது. சமீபத்தில் அமெரிக்கா நியூயார்க் மாகாணத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழந்தைகள் விரும்பி உண்ணும் வானவில் வண்ண மிட்டாய் வடிவில் Fentanyl என்னும் போதை பொருள் கடத்தலை பிடித்துள்ளனர். 15,000 மிட்டாய்கள், குழந்தைகள் விரும்பி விளையாடும் லெகோ பெட்டியில் கடத்த முயன்றது குறிப்பிடத்தக்கது.
2 மில்லிகிராம் Fentanyl ஒரு ஆளையே கொல்ல கூடியது, தற்போது அவர்கள் பிடித்துள்ள போதை பொருளின் அளவு அரைமில்லியன் மக்களை கொல்ல கூடியது என்று போதை தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 2022ல் மேற்கு கடற்கரை வழியே கடத்தப்பட்டு இன்று அமெரிக்கா முழுவதும் இந்த போதை பொருள் பரவத்தொடங்கியுள்ளது.
கலிபோர்னியா மாகாணத்தில் பள்ளி மாணவர்கள் இந்த போதை பொருளை பயன்படுத்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டு, காப்பாற்றப்பட்டுள்ளனர். இதனால் அந்த மாகாணத்தில் கே 12 பள்ளிகளில் போதை முறிவு மருந்துகள் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் மட்டும் 10 மில்லியன் Fentanyl மாத்திரைகள் மற்றும் 980 பவுண்ட் Fentanyl பொடிகளும் போதை பொருள் தடுப்பு பிரிவால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த நாட்டில் போதை பொருள்கள் ஒன்றும் புதிய செய்தி இல்லையே என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் இந்த போதை கடத்தல்கள் தற்போது குறிவைத்துள்ளது குழந்தைகளையும், பதின் பருவ பிள்ளைகளையும். குழந்தைகளுக்கு மிட்டாய்கள் நாம் இயல்பாக வாங்கி தரும் ஒன்று அதில் கலந்துவரும் ஆபத்தை நாம் அறியவாய்ப்பில்லை. இளம்வயதிலேயே அவரகள் இதற்கு அடிமையாகி போனால் அதனால் நேரப்போகும் விபரீதங்களை நம்மால் கற்பனைகூட செய்ய இயலாது. ஒரு தலைமுறையே தடம்மாறி போகும் அபாயம் உள்ளது.
இங்குமட்டுமல்ல இந்தியாவிலும் இன்று இந்த போதை பொருள் கலாசாரம் மெல்ல பரவிவருகிறது. உங்கள் குழந்தைகளை உற்றுக்கவனியுங்கள், அவர்களின் நட்பு வட்டம், அவர்கள் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சிகள், அவர்களின் நடவடிக்கையில் மாற்றம் எதையும் அலட்சியமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். கைக்குள் சுருங்கிவிட்ட உலகில் இன்று எதுவும் சாத்தியம், நம் பிள்ளைகளின் பாதுகாப்பு நமது கடமை. பதின் வயதில் இருக்கும் குழந்தைகளிடம் பெற்றோர் இருவரும் அமர்ந்து பேசுங்கள், அவர்களோடு தோழமையோடு இருங்கள், வீட்டில் கிடைக்கும் அரவணைப்பு அவர்களை வெளியில் வளைக்க நினைக்கும் சூழ்ச்சிகளில் இருந்து காப்பாற்றும்.
மனிதன் சிந்திப்பதை நிறுத்திக்கொண்டால் அது இறப்பிற்கு சமம், இந்த போதை பொருட்கள் அதைத்தான் மனிதகுலத்திற்கு செய்துகொண்டிருக்கிறது. நம் குழந்தைகளையும், அடுத்த தலைமுறையையும் அதற்கு பலிகொடுக்காமல் காப்பற்றவேண்டியது நம் அனைவரின் கடமை.
பதிவு – நறுமுகை ஈஷ்வர்