தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து அதற்கு தமிழ்நாடு காவல்துறை கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த கடுமையான கட்டுப்பாடுகளை தமிழ்நாடு காவல்துறை விதித்துள்ளது.
அதன்படி, ஊர்வலம் நடத்தும்போது இந்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக எதையும் பேசக்கூடாது என்று காவல்துறை தெரிவித்துள்ளது. நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை குலைக்கும் எந்த செயலிலும் ஈடுபடக் கூடாது என்றும் காவல்துறை கூறியுள்ளது. ஊர்வலத்தில் பங்கேற்பவர்கள் தடி, லத்தி அல்லது ஆயுதம் எதையும் கொண்டு வரக் கூடாது என்றும் காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.
ஊர்வலம் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இடதுபுறமாக ஒழுங்கான முறையில் செல்ல வேண்டும் – போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்த கூடாது என்றும் ஊர்வலத்தில் எந்த விதத்திலும் மதம், மொழி கலாச்சாரம் தொடர்பாக பிற குழுக்களின் உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்படும் சேதத்துக்கான செலவுகளை ஏற்றுக் கொள்வதற்கான உறுதிமொழி வழங்கப்பட வேண்டும் என்றும் காவல்துறை கூறியுள்ளது