முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், பேரறிவாளன் ஆகிய 7 பேரும் சிறையில் இருந்தனர். இதில் பேரறிவாளன் கடந்த மே மாதம் 18ம் தேதி உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து சிறையிலுள்ள தங்களை விடுவிக்கக்கோரி நளினி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தால் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட காரணங்களை மேற்கோள்காட்டி தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், இந்த வழக்கில் சிறையில் இருந்த ரவிச்சந்திரனுக்கு தமிழக அரசு காலவரையற்ற பரோல் வழங்கியுள்ளது. இதனால் அவர் தற்போது அவரது உறவினர் வீட்டில் உள்ளார். அதேபோல நளினிக்கும் கடந்த 27.12.2021 முதல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிஆர் கவாய், நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதில் பேரறிவாளன் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு, ஏனைய 6 பேருக்கும் பொருந்தும். சிறையில் 6 பேரின் நடத்தையும் திருப்திகரமாக இருந்தது என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. நன்னடத்தை, சிறையில் கல்வி கற்றது, பரோல் விதிமுறை, ஆளுநரின் தாமதம் ஆகியவற்றின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.