உலகளவில் திரைப்படங்களுக்கான ரேட்டிங் மற்றும் தகவல் தளங்களில் பிரசித்தி பெற்ற தளமான ஐஎம்டிபி உலகளவிலான சிறந்த 1000 திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. புள்ளிகளின் அடிப்படையில் வெளியிடப்பட்ட பட்டியலான இதில் சூரரைப் போற்று புதிய சாதனைப் படைத்துள்ளது.
சுதா கொங்காரா இயக்கத்தில், சூர்யா நடிப்பில், சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்து வெளியிட்ட திரைப்படம் தான் சூரரைப் போற்று. இது ஏர் டெக்கான் விமான நிறுவனத்தின் நிறுவனரான திரு. கேப்டன் கோபிநாத் அவர்களின் சுயசரிதையை அடிப்படையாக கொண்டு தமிழில் உருவாக்கப்பட்ட திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது.
ஓடிடி தளத்தில் வெளியான இத்திரைப்படமானது பல உயரதிகாரிகள், தொழில்துறை நிறுவனர்கள், நிபுணர்கள், அரசியல்வாதிகள் என பலரால் வெகுவாகப் பாராட்டப் பெற்றதோடு, ஆஸ்கர் பட்டியலிலும் இணைந்து தமிழ் திரைப்படத்துறைக்கு பெருமை தேடித் தந்தது.
இந்நிலையில் ஐஎம்டிபி வெளியிட்டுள்ள சிறந்த 1000 திரைப்படங்களின் வரிசையில் 9.1 ரேட்டிங் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துச் சாதனைப் படைத்துள்ளது. 9.3 புள்ளிகளுடன் ஷாஷங் ரிடம்ப்ஷன் திரைப்படம் முதலிடத்தையும், 9.2 புள்ளிகள் பெற்று காட்பாதர் திரைப்படம் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது.
மற்றும் சில திரைப்படங்களான ராட்சசன் மற்றும் விக்ரம் வேதா ஆகிய திரைப்படங்கள் முறையே 34 மற்றும் 58 ஆவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.