காதல் சின்னம் தாஜ் மஹாலை சுற்றிப் பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு கட்டணம் இலவசம்

இந்தியா சுற்றுலா செய்திகள் நிகழ்வுகள் வரும் நிகழ்ச்சிகள்

காதல் சின்னமாக போற்றப்படும் தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க மூன்று நாள்களுக்கு நுழைவுகட்டணம் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அதிசியங்களில் ஒன்றாகவும், காதல் நினைவு சின்னமாகவும் போற்றப்படும் தாஜ்மஹால் உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் அமைந்துள்ளது. இதை காண உலகம் முழுவதிலுமிருந்த ஆயிரகணக்கான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
இதையடுத்து இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருந்து வரும் தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்க நுழைவு கட்டணமாக ரூ. 50 வசூலிப்பக்கப்படுகிறது. அதே போல் சார்க் மற்றும் பிம்ஸ்டெக் (வங்கதேசம், பூட்டான், இந்தியா, மியான்மர், நேபாளம், இலங்கை,தாய்லாந்து) நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கு ரூ. 540, பிற நாடுகளை சேர்ந்தவர்களுக்கு ரூ. 1, 100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதேபோல் 15 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கு நுழைவு கட்டணம் கிடையாது.
இதையடுத்து தாஜ்மஹாலை கட்டிய முகலாய மன்னன் ஷாஜகானின் 368வது நினைவு நாள் உர்ஸ் விழாவாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பிப்ரவரி 17 முதல் 19 வரை தாஜ்மஹாலை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என உர்ஸ் குழுவின் தலைவர் இப்ராஹிம் சைதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: “ஆண்டுதோறும் பிப்ரவரி 17 முதல் 19ஆம் தேதி வரை ஷாஜகானின் நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது. வழக்கம்போல் இந்த ஆண்டில் மேற்கூறிய நாள்களில் தாஜ்மஹாலுக்கு வருபவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை” என்றார்
உர்ஸ் விழாவையொட்டி ஷாஜகான் நினைவிடத்தில் 1, 450 மீட்டர் நீளம் கொண்ட சத்தார் போர்த்தப்பட உள்ளது. இந்த விழா நடைபெறும் 3 நாள்களும் தாஜ்மஹால் வளாகத்தினுள் சிகரெட், புகையிலை பொருள்கள், பேனர், புத்தகம் உள்பட பொருள்களை கொண்ட செல்ல தொல்லியல் துறை தடை விதித்துள்ளது.
இந்த உர்ஸ் விழாவை முன்னிட்டு முகலாய பேரரசர் ஷாஜஹான் மற்றும் அவரது மனைவி மும்தாஜ் ஆகியோரின் நிஜ கல்லறைகள் கொண்ட தாஜ்மஹாலின் அடித்தளம் திறக்கப்படும். அப்போது ‘குஸ்ல்’ சடங்குகள் நிகழ்த்தப்படுவதுடன், ‘குலாப் ஜல்’ (ரோஸ் வாட்டர்) கொண்டு கல்லறைகள் மீது ஊற்றி சடங்குகள் நிகழ்த்தப்படும்.
இந்த நிகழ்வின்போது தாஜ்மஹாலுக்கு வரும் பார்வையாளர்கள் ஷாஜகான் மற்றும் மும்தாஜ் ஆகியோரின் நிஜ கல்லறைகளை பார்க்கும் வாய்ப்பை பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published.