பிக் பாஸ் இறுதிப் போட்டிக்கு நேரடியாக நுழைவதற்கான டாஸ்க் இந்த வாரம் நடைபெறவுள்ள நிலையில், முதல் இறுதிப் போட்டியாளரை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 போட்டி கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் ராபர்ட் மாஸ்டர், ரக்ஷிதா, விக்ரமன், ஆயிஷா, அமுதவாணன், பாடகர் ஏடிகே, மைனா நந்தினி, ஜனனி, அஷீம், தனலட்சுமி, கதிரவன், மகேஸ்வரி, மணிகண்டா, குயின்ஸி, ராம், சிவின், நிவாசினி, செரினா, அசல், சாந்தி, ஜி.பி.முத்து உள்ளிட்ட 21 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டியை நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து 6வது முறையாக தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில், 13-வது வாரத்தில் பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் நுழைந்துள்ளனர். இன்னும் 20 நாள்களே உள்ள நிலையில், இந்த வாரம் ‘டிக்கெட் டூ ஃபைனல்’ டாஸ்க்குகள் ஆரம்பித்துள்ளது.
இந்த டாஸ்க்கில் வெற்றி பெறுபவர்கள் நேரடியாக இறுதி வாரத்திற்கு முன்னேறவுள்ளனர். இந்த வாரம் மற்றும் அடுத்த வார நாமினேஷனின் இடம்பெற மாட்டார்கள். மேலும், டிக்கெட் டூ பைனல் டாஸ்க்குகள் மிக கடுமையாக இருக்கும் என்பதால், போட்டியாளர்கள் டாஸ்க்குகளுக்கு தயாராகி வருகின்றனர்.
சாதாரண டாஸ்க் கொடுத்தாலே பல வகையான பிரச்னைகள் ஏற்படும் நிலையில், டிக்கெட் டூ ஃபைனல் டாஸ்க்கில் என்னென்ன பிரச்னைகள் வெடிக்கும் என்ற எதிர்பார்பிலும், முதல் இறுதிப் போட்டியாளரை காணவும் ரசிகர்கள் காத்துள்ளனர்.