மக்களை மகிழ்விக்கும் கலைத் துறை பல்வேறு பரிமாணங்களை கொண்டது. தெருக்கூத்து, மேடை நாடகம் என கலைகள் அக்காலத்தில் மிகவும் பிரபலம். இதில் நடிக்க விரும்புவோர் இசை, நடிப்பு, பாட்டு, பேச்சு என அனைத்தையும் கற்றப் பிறகு அதில் வாயப்பு பெறுவார்கள். தெருக்களில் மக்களை மகிழ்வித்த கூத்துக் கலை, பின்னர் மேடைநாடகம் என புதுவடிவம் பெற்று காலப்போக்கில் தொழில் நுட்பம் வளர்ச்சியில் சினிமா என்ற பரிமாணத்தைப் பெற்றது.
அக்காலத்தில் சிறந்து விளங்கிய நாடக நடிகர்கள் சினிமாவில் நடிக்க வாய்ப்புப் பெற்றார்கள். அனைத்து திறைமைகளையும் கொண்டிருந்தாலும் சினிமாவில் வாய்ப்புகள் கிடைப்பதென்பது மிகவும் கடினம். அப்படி மிகவும் சிரமப்பட்டு வாய்ப்புகளைப் பெற்றவர்கள் முதல் தலைமுறை நடிகர்கள். மிக முக்கியமாக சொல்லப்படுவது அவர்கள் யாரும் யாருடைய சிபாரிசும் இல்லாமல் வாய்ப்பு பெற்றது தான். அவ்வாறு தமிழ் சினிமாவின் முதல் தலைமுறை நடிகர்கள் தியாகராஜ பாகவதர், சின்னப்பா போன்றோர் திரையுலகில் கோலோச்சினர். அதன் பின் வந்த தமிழ் சினிமா நடிகர்கள் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, என்.எஸ். கிருஷ்ணன், முத்துராமன், பானுமதி, அஞ்சலிதேவி, சாவித்ரி என இரண்டாம் தலைமுறை நடிகர்களும் புகழின் உச்சியில் இருந்தார்கள்.
இவர்களின் வாரிசுகளின் வரவால் தமிழ் சினிமாவில் நெப்போட்டிசம் என்ற விஷயம் பேசுபொருளாக மாறியது. அதிகார பலம், சிபாரிசு போன்றவற்றால் வாரிசு நடிகர்களுக்கு எளிதில் வாய்ப்பு கிடைத்து விடுகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக காணப்படுகிறது. மூன்றாம் தலைமுறை நடிகர்களில் சிவாஜியின் மகன் பிரபு, முத்துராமனின் மகன் கார்த்தி, எம்.ஆர். ராதா மகள் ராதிகா, மகன் ராதாரவி என இவர்களைப் போல் பலரும் தமிழ் சினிமாவில் படையெடுக்கத் தொடங்கிவிட்டார்கள். இதனால் திறமைமிக்க, நடிக்க ஆர்வம் கொண்டவளுக்கு பின்புலம், சிபாரிசு, அதிகாரம், பணபலம் இல்லாததால் திறமை இருந்தும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்பது மிகக் கசப்பான உண்மை.
நான்காம் தலைமுறை நடிகர்களில் இது மிக மிக மோசமான நிலைக்கு கொண்டுச் சென்றுள்ளது. இன்றைய நடிகர்களில் விஜய், சூர்யா, தனுஷ், சிலம்பரசன், கார்த்தி, விக்ரம்பிரபு, துருவ் விக்ரம், வரலக்ஷ்மி என்று வாரிசு நடிகர்களின் படையெடுப்பு அளவுக்கு மீறி காணப்படுகிறது. இதனால் இளம்தலைமுறை நடிகர்கள், நடிகைகள் அச்சம் தெரிவித்துள்ளனர். வாரிசு நடிகர்கள் என்பதால் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள், பெரிய இயக்குநர்கள் வாய்ப்பு அவர்களுக்கு எளிதில் கிடைத்துவிடுகிறது, பின்புலம் இல்லாத அறிமுக நடிகர்களுக்கு இதெல்லாம் மறுக்கப்படுகிறது என்பது அவர்களின் குற்றச்சாட்டு. அந்தக் குற்றச்சாட்டு ஒருவகையில் உண்மையும் கூட.