மத்திய அரசின் இரண்டு சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானங்கள் தாக்கல்; ஒரு மனதாக நிறைவேறியது

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

சட்டப்பேரவையில் 2 தனித் தீர்மானங்களை கொண்டு வந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், நாட்டையும் நாட்டு மக்களையும் அச்சத்திலும் பதற்றத்திலும் வைக்கும் 2 மிக முக்கிய பிரச்சனைகள் குறித்து சட்டமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டிய நெருக்கடியான அரசியல் சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறை மிக மோசமான எதேச்சாதிகார எண்ணம் என்றும் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்பு என்பது தமிழ்நாட்டின் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைப்பதற்கான சதி என்றும் முதலமைச்சர் விமர்சித்தார். இந்த இரண்டும் மக்களாட்சியை குலைக்கும் செயல்கள் என்பதால், இவை இரண்டுக்கும் எதிராக அனைவரும் ஒருசேர குரல் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, 2 தீர்மானங்கள் மீதும் சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது. இந்த தீர்மானங்களை திமுக கூட்டணிக்கட்சி உறுப்பினர்கள் ஆதரித்து பேசினர். தொகுதி மறுவரை செய்வதற்கு எதிராக கொண்டு வரப்பட்ட தனித் தீர்மானத்ததிற்கு ஆதரவு தெரிவித்த அதிமுக, தாங்கள் முன்வைக்கும் கோரிக்கை நிறைவேற்றும் பட்சத்தில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு அளிப்போம் என்று கூறியது.
பாஜக தரப்பில் பேசிய எம்எல்ஏ வானதி சீனிவாசன், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளில் மறு சீரமைப்பு என்பது மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை குறைக்கும் என்ற கவலையையும் அச்சத்தையும் பாஜக புரிந்துக்கொள்வதாக கூறினார். இது குறித்து எந்த இடத்தில் என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதை தமிழக பாஜக செய்யும் என்றும் தெரிவித்தார். அதே சமயம், ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தனித் தீர்மானம் தேவையற்றது என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
இதையடுத்து, சட்டப்பேரவையில் 2 தீர்மானங்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *