புதிதாய் பொறுப்பேற்றிருக்கும் திரு.மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, அதன் தலைமைச் செயலாளராய் திரு.வெ.இறையன்பு, ஐ.ஏ.எஸ் அவர்களை கடந்த வாரம் நியமித்திருந்தது. திரு. வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ், அவர்கள் தன் நிர்வாகத்திறனுக்கும், நேர்மையான செயல்பாட்டிற்கும் பெயர் பெற்றவர் ஆவார். சமூகவலைதளவாசிகளால் தன் செயல்பாடுகளுக்காகவும், பேச்சுக்களுக்காகவும் பெரிதும் பாராட்டப் பெறுபவர்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளராய் அவர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு நெறிமுறைகளை மேற்கொண்டு வருகிறார். அவ்வகையில் அவர் தற்போது நெடுஞ்சாலைத்துறைக்கு அனுப்பியிருக்கும் சுற்றறிக்கை அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அந்த சுற்றறிக்கையில் கூறப்படுவதாவது,
மாநகராட்சி, ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் அமைந்துள்ள நெடுஞ்சாலைத்துறையின் கீழ் வரும் சாலைகளின் புணரமைப்பின் போது, ஏற்கனவே இரண்டு, மூன்று அடுக்கு சாலையின் மீது மேலும் ஒரு அடுக்கு சாலை இடப்படுவதாய், வடிகால்கள் மற்றும் நடைபாதைகள் பாதிக்கப்படுவதாகவும் மேலும் சாலையின் உயரம் கூடுவதால் வீடுகள் தாழ்ந்து மழைக்காலத்தில் வெள்ளம் உட்புகுந்து விடுவதாகவும் இதனைத் தடுக்க சாலையின் உயரம் கூட்டப்படுவதற்கு தடை விதிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புணரமைப்புப் பணிகளின் போது, இருக்கும் சாலையை சுரண்டி எடுத்து, பின்னர் அதே அளவுக்கான சாலையை மட்டுமே மீண்டும் அமைக்க வேண்டும் என அதற்கான நெறிமுறைகளையும் அந்தச் சுற்றறிக்கை எடுத்துரைக்கிறது.
இந்த நடவடிக்கையானது சாலையின் பேரில் நடக்கும் ஊழல்களைக் குறைக்கும் எனவும், சாலைகளின் தரத்தை உயர்த்தும் எனவும் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
- சந்தீப் குமார்