தமிழக முன்னாள் முதல்வர், கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 15ம் தேதி அவரது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அதேபோன்று, அக்டோபர் 2ம்தேதி அவரது நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இவர் முதல்வர் மட்டுமின்று, தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் தூணாக நின்றவர், சிறந்த அரசியல்வாதி, தலைசிறந்த தலைவர் என்று போற்றப்படுபவர். எளிமையின் சிகரமான இவர் இந்தியாவின் இரண்டு முறை பிரதமரை தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்கு வகித்தார். அதனாலேயே காமராஜர் ”கிங் மேக்கர்’ என்றும் அன்புடன் அழைக்கப்படுகிறார்.
1953ம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றார் காமராஜர். பாண்டியர், சோழர்களின் காலத்தில் இருந்ததை விட, இவரின் ஆட்சி காலத்தில் தமிழகம் தன் பொற்காலத்தை கண்டது. தமிழகத்தில் முதல் முறையாக மதிய உணவுத் திட்டத்தை துவங்கி வைத்தார். கிராமங்கள் தோறும் தொடக்கப் பள்ளிகளைத் தொடங்கி பள்ளி செல்லாத ஏழை எளிய குழந்தைகளின் வாழ்வில் கலங்கரை விளக்கேற்றினார்
காந்தியடிகளின் அகிம்சை, சத்தியம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட பெருந்தலைவர் கர்மவீரர் காந்தியின் பிறந்த தினமான 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி மறைந்தார். இதில், இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால், காமராஜர் மறைந்த போது, இவரிடம் சிறிதளவு பணம் மட்டுமே இருந்தது. வாடகை வீட்டில் வசித்த இவருக்கு வங்கிக் கணக்கோ, சொத்தோ இல்லையாம். அதனால், தான் இன்றும் மக்கள் மனதில் போற்றப்படும் தலைவர்களில் ஒருவராக காமராஜர் இருக்கிறார். அதுமட்டுமின்றி இவரது, மறைவுக்கு பின் இவரின் ஒப்பற்ற சேவைகளை பாராட்டி, 1976ம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.