தமிழக சட்டப்பேரவையில் 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்தார்.
தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்பட இருக்கிறது. அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு கட்டணமில்லா பேருந்துப் பயண அட்டையை அரசு வழங்க இருக்கிறது. உயிர்த் தியாகம் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த படை வீரர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசால் வழங்கப்படும் கருணைத் தொகை 20 இலட்சம் ரூபாயிலிருந்து, இருமடங்காக உயர்த்தி 40 இலட்சம் ரூபாயாக வழங்கப்படும்.
1,000 படுக்கைவசதி கொண்ட ‘கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை’ இந்த ஆண்டு திறந்து வைக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள 30 ஆயிரத்து 122 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 18 இலட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும். கோயம்புத்தூரில் 9,000 கோடி ரூபாய், மதுரையில் 8,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் செயல்படுத்தப்படும்.