முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை காலை சிங்கப்பூர் புறப்படுகிறார்.
அடுத்தாண்டு ஜனவரி மாதம் 10, 11ம் தேதி உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. இதையொட்டி, முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதலமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். நாளை காலை விமானம் மூலம் சிங்கப்பூர் புறப்படும் ஸ்டாலின், அன்று மாலையே சிங்கப்பூர் சென்றடைகிறார். புதன்கிழமை அன்று தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கும் முதலமைச்சர் ஸ்டாலின், சிங்கப்பூர் இந்திய வர்த்தக மற்றும் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த 350 தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.இந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து 26 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ஜப்பானில் தங்கும் முதலமைச்சர் ஸ்டாலின், முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில்தொழில் தொடங்குவதற்கு அழைப்பு விடுக்க உள்ளார். 9 நாட்கள் சிங்கப்பூர், ஜப்பான் பயணத்தை முடித்துவிட்டு வருகிற 31ஆம் தேதி மீண்டும் சென்னை திரும்புகிறார்.
முன்னதாக, கடந்த ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழு துபாய், அபுதாபி நாடுக்கு தொழில் முதலீடுகளை ஈர்த்து வந்தது. 6 தொழில் நிறுவனங்களுடன் 6 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் 14,700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்த இலக்கு நிர்ணயித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.