தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தலமாக மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியை அறிவித்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பல்லுயிர் மரபுத் தலங்கள் என்பது, சூழலில் முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்பு கடலோர மற்றும் உள்ளூர் நீர்நிலைகள், பல்லுயிர் தன்மை மிக்க தாவர, விலங்கின சிற்றினங்களின் வாழ்விடங்கள், பரிணாம முக்கியத்துவம் வாய்ந்த சிற்றினங்களின் வாழ்விடங்கள் போன்றவற்றைப் பாதுகாக்கும் நோக்கத்திற்காக அமைக்கப்பட்டது. அரிட்டாப்பட்டி கிராமம் என்பது 7 சிறுகுன்றுகளை தொடர்ச்சியாக கொண்டுள்ள பகுதியாகும்.
இந்த மலைக்குன்றுகளின் தனித்துவமான நிலப்பரப்பு இப்பகுதியின் முக்கிய நீர் ஆதார பகுதியாக செயல்படுகிறது. 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்று குளங்கள், 3 தடுப்பணைகள் உள்ளது. 16ம் நூற்றாண்டில் பாண்டியர்களால் கட்டப்பட்ட ஆனைகொண்டான் ஏரி, 250 பறவையினங்கள் உள்ளன. லகர் ராசாளி, ஷாஹீன் ராசாளி மற்றும் ராசாளிப் பருந்து ஆகிய 3 கொன்றுண்ணிப் பறவையினங்கள் உள்ளன. எறும்பு திண்ணிகள், மலைப்பாம்பு, அரிய வகை தேவாங்கு ஆகிய வனவிலங்குகளும் உள்ளன.
மேலும் இப்பகுதி பல பறவைகள் மற்றும் விலங்குகளின் வாழ்விடமாக உள்ளது. பல்வேறு சமண சிற்பங்கள், படுக்கைகள், தமிழ் பிராமி கல்வெட்டுகள், வட்டெழுத்து கல்வெட்டுகள், 2200 ஆண்டுகள் பழமையான குடைவரைக் கோயில்கள் உள்ளன. இதனால் கிராம ஊராட்சிகள் மற்றும் மாநில தொல்லியல் துறை, தமிழ்நாடு கனிம நிறுவனம் போன்ற பல துறைகளின் ஆலோசனைக்குப் பிறகு அரிட்டாப்பட்டியை பல்லுயிர்ப் பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வளமான உயிரியல் மற்றும் வரலாற்றுக் களஞ்சியத்தைப் பாதுகாக்கவும் இது உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.