அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ரூ.2.5 கோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ், இலக்கிய, பண்பாடு மற்றும் பொருளாதாரம் சார்ந்த திறனாற்றல் குறித்த ஆராய்ச்சிக்காக ஓர் தமிழ் இருக்கையை நிறுவிட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்துடன் ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை அமைப்பு ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி, ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை அமைப்பின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு அரசு, அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிடும் பொருட்டு ரூ.3 லட்சம் அமெரிக்க டாலர் வழங்கிட ஆணையிடப்பட்டு, ரூ.3 லட்சம் அமெரிக்க டாலர் வழங்கப்படும் என்று முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட ரூ.2 கோடியே 50 லட்சத்திற்கான காசோலையை ஹூஸ்டன் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை அமைப்பின் தலைவர் சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன் மற்றும் செயலாளர் பெருமாள் ஆகியோரிடம் நேற்று வழங்கினார்.
முன்னதாக, கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பெயரில், அவரின் 150ம் பிறந்த நாளினை முன்னிட்டு 2021ம் ஆண்டு உருவாக்கப்பட்ட புதிய விருதினை முதன்முதலாக, 33 ஆண்டுகளாக துறைமுகம் மற்றும் சரக்குப் பெட்டகத் தொழிலில் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்திப் பெட்டக ஏற்றுமதி – இறக்குமதியை எளிதாக்கிய கப்பல் பொறியியல் தொழில்நுட்ப வித்தகர் எண்ணரசு கருநேசனுக்கு விருதுத் தொகையாக ரூ.5 லட்சத்திற்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வில், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் இறையன்பு, செய்தித்துறை செயலாளர் சண்முகம் மற்றும் தமிழ் வளர்ச்சி இயக்குநர் அருள் ஆகியோர் கலந்துகொண்டனர்.