திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ-வுக்கு நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கவும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலக முதலீட்டாளார்கள் மாநாட்டுக்கு தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கவும் முதலமைச்சர் ஸ்டாலின், சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் சிங்கப்பூர் சென்றுள்ள அவர், அந்நாட்டின் போக்குவரத்து மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ஈஸ்வரனை சந்தித்து பேசினார். சென்னையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள அப்போது அழைப்பு விடுத்தார்.
அதனை தொடர்ந்து, சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகின. அதன்படி, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த SICCI நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதைப்போல, சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த மின்னணு பாகங்கள் தயாரிப்பு நிறுவனத்துடன் 312 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
சிங்கப்பூர் பல துறைகள் முன்னேற வித்திட்டவர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ. சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்களில் பெரும்பகுதியினர் மன்னார்குடி, பட்டுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்தவர்கள். தமிழர்களின் வளர்ச்சிக்கு வித்திட்ட லீ குவான் யூ-வுக்கு மன்னார்குடியில் நினைவுச்சின்னமும், அவரது பெயரில் நூலகமும் அமைக்கப்படும்.
தமிழை தமிழே என அழைப்பதில் இருக்கும் சுகம் வேறு எதிலும் இல்லை. கடல் கடந்து சிங்கப்பூர் வந்திருப்பதாக நான் நினைக்கவில்லை. தமிழ்நாட்டில் இருப்பதாகவே உணர்கிறேன். தமிழால் இணைந்துள்ள நம்மை மதமோ சாதியோ பிளவுபடுத்த முடியாது. தமிழர் வாழாத நாடு இந்த பூமிப்பந்தில் இல்லை என சொல்லத்தக்க அளவுக்கு பரந்து விரிந்து வாழும் தமிழர்கள் அனைவருக்கு நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பது திராவிட இயக்கம் தான். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தொடர்ந்து, சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள் சார்பில் நடைபெற்ற கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது தமிழ்நாடு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சிங்கப்பூரில் “வேர்களைத் தேடி” என்ற அயலகத் தமிழ் இளைஞர்களுக்கான திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.