தமிழ்நாட்டில் உள்ள வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும் – ஸ்டாலின் உறுதி

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள்

புலம் பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவர்கள் நாட்டிற்கு எதிரானவர்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.
தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வந்துள்ள வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகள் பரவின. மேலும், வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்த விவகாரம் பீகார் மாநில சட்டப்பேரவையில் நேற்று எதிரொலித்தது. அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று இந்தப் பிரச்னையை நேரில் ஆராய குழுவை அனுப்பி வைப்பதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்தார்.
இந்த நிலையில் வடமாநிலத் தொழிலாளர் ஒருவர் ரயிலில் அடிபட்டு நேற்று உயிரிழந்தார். தாக்கப்பட்டதால் தான் அவர் உயிரிழந்தார் என தகவல் பரவ, காவல்நிலையத்தை வடமாநிலத் தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர். அத்துடன், தாக்குதல் அச்சம் காரணமாக நேற்று இரவு முதல் வடமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு ரயில்கள் மூலம் கிளம்பிச் சென்றனர். இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், வதந்தி பரப்பிய இரு பத்திரிகை ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வடமாநிலத் தொழிலாளர்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
வேறு ஏதோ மாநிலத்தில் நடந்த மோதலை தமிழ்நாட்டில் நடந்தது போல் வதந்தி பரப்பியுள்ளனர் என்றும் வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்பதை நம்மைவிட புலம்பெயர் தொழிலாளர்கள் அழுத்தமாக கூறுவர் எனவும் முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். வடமாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் எந்த பாதிப்பும் நேராது என பீகார் முதல்வர் நிதிஷ் குமாரிடம் தொலைபேசியில் உறுதியளித்ததாகவும், வடமாநிலத் தொழிலாளர்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம் எனவும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published.