அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை நடைபெற்றது; உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவக்குழு தெரிவித்துள்ளது

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மருத்துவம் மற்றவை

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காலை 10.15 மணியளவில் அறுவை சிகிச்சை நிறைவடைந்தது. இதில், 4 ரத்த நாளங்களில் அடைப்பு இருந்த நிலையில், அந்தப் பகுதிகளில் 4 ரத்தக் குழாய்கள் பொருத்தப்பட்டன.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பலரிடம் பணம் பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த 14-ஆம் தேதி அதிகாலை கைதுசெய்தனர்.
அப்போது, நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ரத்த நாளத்தில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, உயர்நீதிமன்ற உத்தரவின்படி, காவேரி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார்.
அங்கு இதய நோய் சிறப்பு மருத்துவர்கள் குழு, செந்தில் பாலாஜிக்கான அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.
இதனைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜிக்கு புதன்கிழமை அதிகாலை 5.15 மணிக்கு அறுவை சிகிச்சை தொடங்கியது. இதய மருத்துவர் ரகுராம் தலைமையிலான இந்தக் குழுவில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் இடம்பெற்றிருந்தனர்.
காலை 10.15 மணியளவில் அறுவை சிகிச்சை நிறைவடைந்தது. இதில், 4 ரத்த நாளங்களில் அடைப்பு இருந்த நிலையில், அந்தப் பகுதிகளில் 4 ரத்தக் குழாய்கள் பொருத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, வென்டிலேட்டர் கருவி பொருத்தி மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். மதிய நேரத்தில் மயக்க நிலையிலிருந்து செந்தில் பாலாஜி மீண்டுவந்தார்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், ரத்த அழுத்தம் மற்றும் ரத்த ஓட்டம் சீராக இருப்பதாகவும் காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. 3 நாட்களுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருப்பார் என்றும், அதன்பிறகு பேச ஆரம்பிப்பார் என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். முற்றிலும் குணமடைவதற்கு 3 மாதங்கள் வரை ஆகலாம் என்றும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *