உலகில் ஆண்டுதோறும் சுமார் 12 லட்சம் பேர் சாலை விபத்துகளால் உயிரிழப்பதாக தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம், 2030க்குள் விபத்துகளின் எண்ணிக்கையை 50% குறைத்திட வேண்டும் என இலக்காக நிர்ணயித்து, நாடுகளையும் நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி வருகிறது. அப்படி நடவடிக்கை எடுக்க முயன்றாலும் இந்தியாவில் விபத்துகள் தான் குறைந்தபாடில்லை. அதற்கு தமிழ்நாடும் ஒரு காரணம் என்பது வருத்தமான உண்மை. 2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை, இந்தியாவிலேயே சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் தொடர்ந்து தமிழ்நாடு முதல் இடத்தில் இருப்பதே காரணம்.
2022இல் மட்டும் தமிழ்நாட்டில் 64,105 சாலை விபத்துகள் நடைபெற்று 17,844 பேரின் உயிரை பறித்தது. 2023இல் 66,841 விபத்துகள் பதிவாகி, விபத்துகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்த நிலையில், 18,074 பேர் உயிரிழந்து உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் முந்தைய ஆண்டை காட்டிலும் அதிகரித்துள்ளதாக மாநில குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் சாலை விபத்துகள் அதிகம் பதிவான மாவட்டங்கள் சென்னை மற்றும் கோவை தான். 2023 ஆம் ஆண்டில் சென்னை மற்றும் கோவையில் தலா 3,642 விபத்துகள் பதிவான நிலையில், சென்னையில் 500 பேரும், கோவையில் 1,040 பேரும் விபத்துகளில் பலியாகி உள்ளனர்.