டில்லியில் இன்று பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்துள்ளார். பதவியேற்று முதல்முறையாக இரண்டு நாள் பயணமாக டெல்லி வந்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். பிரதமர் உடனான இந்த சந்திப்பில் தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய கோரிக்கைகளையும், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை பிரதமரிடம் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பின்போது, ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தநிலையில், பிரதமருடனான சந்திப்புக்கு பின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியது; பிரதமர் மோடியை சந்தித்தது மரியாதை நிமித்தமானது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்குமாறு பிரதமரிடம் வலியுறுத்தினேன். நீட் விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தேன். நீட் தேர்வு குறித்த தமிழக மக்களின் மனநிலை தொடர்பாக பிரதமர் மோடியிடம் பேசினேன். நீட் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் சட்டப்போராட்டம் தொடரும் என பிரதமர் மோடியிடம் தெரிவித்தேன். நீட் விலக்கு கேட்ட போது பிரதமர் மோடி சில விளக்கங்களை அளித்தார். தமிழ்நாட்டில் விளையாட்டு மைதானங்கள் அமைப்பது தொடர்பாகவும் பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன். அடுத்த முறை கேலோ இந்தியா போட்டிகளை தமிழகத்தில் நடத்துமாறும் கோரிக்கை வைத்தேன். ஒன்றிய அரசின் துறைகளில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தேன் என்றார்.