சுவாமிமலை சாமிநாத சாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.
சுவாமிமலை தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடாகும். இங்கு அறுபது தமிழ் வருட தேவதைகளும் அறுபது படிக்கட்டுகளாக அமைந்த கட்டு மலைக்கோயிலாகும் இத்தலத்தினை தரிசனம் செய்ய வருகை தரும் முருக பக்தர்களுக்கு 60 தமிழ் வருட தேவதைகளும் 60 படிகட்டுகளாக இருந்து சேவை செய்வதாக ஐதீகம் மேலும் இத்தலத்தில் தான் முருகப்பெருமான் தனது தந்தை சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திர பொருளை, குருவாக இருந்து உபதேசம் செய்தார் என்பதும் வரலாறு எனவே இத்தலத்தில் முருகப்பெருமான் சுவாமியே நீ என்றும் சுவாமிநாதன் என்றும் போற்றப்படுகிறார்
இத்தகைய சிறப்பு பெற்ற நான்காம் படைவீடான சுவாமிமலையில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா பத்து நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இவ்விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. வள்ளி தெய்வானை சமேத சண்முகசுவாமி சிறப்புமலர் அலங்காரத்தில் விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரருடன் தங்க கொடிமரம் அருகே எழுந்தருள, கொடிமரத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வேலுடன் கூடிய யானை சின்னம் பொறிக்கப்பட்ட திருக்கொடி ஏற்றப்பட்டு மகா தீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிகளுக்கும் கோபுர ஆர்த்தி செய்யப்பட்டது, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது. வரும் 30-ம் தேதி இரவு பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப்பாடு நடைபெருகிறது. தைப்பூச தினமான பிப். 4-ம் தேதி காலை 11 மணியளவில் காவிரியில் தீர்த்தவாரி நடைபெறவுள்ளது. பின்னர் இரவு கொடிஇறக்கம் செய்யப்பட்டு, 5-ம் தேதி சுவாமி மலைக்கோயிலுக்கு திரும்ப உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் உபயதாரர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.