தலைமைப் பயிற்சியாளரானார் ராகுல் டிராவிட் – கிரிக்கெட் இரசிகர்கள் மகிழ்ச்சி

செய்திகள்

இந்திய அணி இதுவரை இல்லாத அளவில் இரண்டாகப் பிரிந்து வரும் ஜூலை மாதம் இரண்டு நாடுகளில் நடைபெறும் இருவேறு போட்டிகளில் பங்கு பெறுகிறது. வீராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை டெஸ்ட் தொடரின் இறுதி ஆட்டத்திலும், மற்றொரு இந்திய அணி இலங்கையில் நடைபெறும் ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும் பங்கெடுக்கிறது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராய் தற்போது பதவி வகித்து வரும் ரவி சாஸ்த்திரி மற்றும் குழுவினர் விராட் கோலி அணியுடன் இங்கிலாந்து செல்ல இருப்பதால், இலங்கைக்கு செல்லும் இந்திய அணிக்கு முன்னாள் வீரரும் கேப்டனுமான ராகுல் டிராவிட் அவர்களை தலைமைப் பயிற்சியாளராய் நியமித்துள்ளது.

இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களுள் ஒருவராக இருந்து பல சாதனைகளைப் புரிந்தவர் ராகுல் டிராவிட். தற்போது நேஷனல் கிரிக்கெட் அகாடெமியின் தலைவராக பொறுப்பு வகித்து வருவதோடு இந்தியா ஏ, மற்றும் இந்தியா இளையோர் ஆகிய அணிகளின் பயிற்சியாளராய் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்.

அவரது பயிற்சியில் உருவாகி வந்துள்ள இளம் வீரர்களாகிய ஸ்ரேயஸ் அய்யர், ரிஷப் பண்ட் ஆகியோர் இன்று இந்திய அணியின் பிரதான வீரர்களாக இடம்பிடித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாய் ஈடுபட்டுவரும் டிராவிட்டை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராய் அறிவிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் நீண்ட நாட்களாக கோரப் பட்டு வந்த நிலையில் இந்த அறிவிப்பு வந்திருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

முன்னர் சாஸ்த்திரிக்கு முன் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே பதவி விலகிய போது ராகுல் டிராவிட்டிற்கு அளிக்கப்பட்ட தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை, தான் இன்னும் அதற்கான தகுதிகளைப் பெறவில்லை எனக் கூறி அவர் நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.