எங்கு செல்வதென்றறியாது அங்கும் இங்குமாக தெறித்து ஓடும் மக்கள். ஓடும் விமானங்களின் வெளிபுறத்தில் தொற்றிக் கொண்டாவது நாட்டை விட்டு வெளியேறிட வேண்டுமென முயன்று நடுவானில் இருந்து மூவர் கீழே விழுந்த இறந்த அவலம். நடுக்கத்துடனும் கலக்கத்துடனும் செய்வதறியாது தவிக்கும் மக்கள். தொடரும் கைதுகளும் கொலைகளுமாக அடாவடி செய்யும் தாலிபன்கள். கடந்த ஒருவார காலமாக ஆப்கானில் நிலவி வரும் கலங்க வைக்கும் காட்சிகள் இவை. ஒரு நாட்டின் அரசாங்கமும் பாதுகாப்பும் சீர்குலைந்து தீவிரவாதிகளால் அந்த நாடு கையகப்படுத்தப்பட்டால் என்ன நிகழும் என்பதற்கான நிகழ்கால உதாரணம் தான் நம் கண்முன்னான இன்றைய ஆப்கானின் நிலை.
தன் தொடக்ககாலத்தில் சிறு போராட்டக் குழுவாக இருந்து பின்னர் தீவிரவாத குழுவாக மாறிய வரலாற்றை கொண்டவர்கள் தாலிபன்கள். ஆப்கானில் அமேரிக்க நேட்டோ படைகள் நுழைவதற்கு முன்னர் அவர்கள் நடத்திய ஐந்தாண்டு ஆட்சியே, இருபது வருடங்கள் கழிந்தும் அவர்கள் மீதான பயத்தினை அம்மக்களின் மனதில் நிலைநிறுத்தியுள்ளது. அத்தகைய கடுமையான கொடுங்கோல் ஆட்சியும், கடுமையான மனித உரிமை மீறல்களுமே தாலிபான்களின் ஆட்சி முறை. ஷரிய சட்ட முறையை கடைபிடிப்பதாக சொல்லும் தாலிபன்கள் தங்கள் ஆட்சிகாலத்தில் ஆப்கானை ஒரு வாழும் நரகமாக மாற்றி வைத்திருந்ததை அம்மக்கள் இன்றும் நடுக்கத்துடன் நினைவு கூறுகின்றனர்.
இத்தனை நாட்களாக ஆப்கானில் முகாமிட்டு அவர்களின் பாதுகாப்பை உறுதியளித்து வந்த அமேரிக்கா, தாலிபான்களுடன் இரகசிய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று ஏற்பட்டதோடு அதன் படைகளை விலக்கிக் கொண்டது. முன்னர் தாலிபான்களை ஒழிக்க அவர்கள் பயன்படுத்திய அந்நாட்டு மக்களையும், அரசாங்கத்திற்கு உதவிய நபர்களையும் அவர்கள் தங்களுடன் அழைத்துச் செல்வதாக முன்னர் உறுதியளித்திருந்த நிலையில், அதிலிருந்து திடீரென பின்வாங்கியிருப்பது ஆப்கன் மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தாலிபான்களும் அத்தகைய நபர்களை தேடிக் கண்டுபிடித்து கொல்வது சித்திரவதை செய்வதுமான செயல்களில் மறைமுகமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தாலிபான்களின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் எந்த நாடும் ஆப்கானுக்கு ஆதரவளிக்க தயாரில்லாமல் கைவிட்டிருப்பது ஆப்கன் மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. மேலும் சீனா தாலிபன்களுடன் சமரசமாக செல்ல இருக்கிறோம் என அறிக்கை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தாலிபன்களால் அந்நாட்டில் மக்களின் சுதந்திரம் பறி போனதுடன், பெண்களுக்கான பாதுகாப்பும் உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளது. கடும் அச்சத்திலும் கவலையிலும் உறைந்துள்ள அந்நாட்டு மக்கள் யாராவது உதவிட மாட்டார்களா என்னும் ஏக்கத்தில் தவித்து வருகின்றனர்.
உலகநாடுகள் ஆப்கானை கைவிட்டுள்ள இந்த சூழ்நிலையில் ஆப்கன் தன்னை தானே மீட்க வேண்டும் என்னும் குரல்கள் கேட்கத் தொடங்கியுள்ளன. தாலிபன்களின் செயல் ஆப்கன் மக்களிடையே ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பெண்களிடம். இது தேசிய அளவிலான கிளர்ச்சியாக உருப்பெற்று ஆப்கன் மக்கள் கூடிய விரைவில் தங்களைத் தாங்களே மீட்பர் என நம்பப்படுகிறது. நாமும் பிராத்திப்போம்.