கேரளா ஸ்டோரி என்பது சுதிப்தோ சென் இயக்கி விபுல் அம்ருத்லால் ஷா தயாரித்த இந்திய இந்தி மொழித் திரைப்படமாகும். கேரளாவைச் சேர்ந்த பெண்கள் குழு இஸ்லாம் மதத்திற்கு மாறி இஸ்லாமிய நாடுகளான ஈராக் மற்றும் சிரியாவில் வேலைக்குச் செல்கிறார்கள். அதன் பின் அவர்கள் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் கதையாய்ப் பின்தொடர்கிறது.
சுதிப்தோ சென் இயக்கிய, கேரளா ஸ்டோரி, படத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளதால், எதிர்ப்புகள் மற்றும் விவாதங்களைத் தூண்டியது. அதா ஷர்மா நாயகியாக நடித்துள்ள இப்படம் மே 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
கேரளாவைச் சேர்ந்த 32,000 சிறுமிகள் காணாமல் போய் பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் இணைந்ததாக படத்தின் ட்ரெய்லர் கூறியதை அடுத்து இந்த படத்திற்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பின.
தி கேரளா ஸ்டோரி’யின் முன்னுரை கவனத்தையும் உணர்ச்சிப் பூர்வமான காட்சிகளையும் கொண்டு நகர்கிறது , ஆனால் இயக்குனர் சுதிப்தோ சென்னின் திரைக்களம் சினிமா சாமர்த்தியத்தை விட உள்ளூர் அரசியலால் வழிநடத்தப்படுகிறது.
படத்தின் பின்பகுதியில் பயங்கரவாதத்தை வேரூன்ற வைக்க பெண்களின் அறியாமையைப் பயன்படுத்தி அவர்களை ஏமாற்றுவது, அவர்களைத் தீவிரவாதிகளாக மாற்றுவது மற்றும் கடத்தல் ஆகியவை சொல்லப்பட காத்திருக்கும் கதை.
பல வருட ஆராய்ச்சிக்குப் பிறகு, இயக்குநர் சுதிப்தோ சென் தி கேரளா ஸ்டோரி யை சொல்லும் விதம், பிரச்சனையின் நேர்மையான சித்தரிப்பைக் காட்டிலும் மிகவும் தெளிவான காட்சியோட்டங்களைக் கொண்டுள்ளது. படத்தில் வரும் மதவெறியர்களைப் போலவே, பார்வையாளர்களை வெறுப்புணர்வாளர்களாக மாற்றவும், சமூகத்தில் தங்களை வெளிப்படுத்தவும் தயாரிப்பாளர்கள் ஆர்வமாக இருப்பதாகத் தெரிகிறது.
இஸ்லாமிய தேசத்திற்கு அப்பாவி முஸ்லிம் அல்லாத சிறுமிகள் எவ்வாறு பணியமர்த்தப்படுகிறார்கள் என்பதற்கான உண்மைக் கதைகளின் அடிப்படையில் கூறப்பட்டது என சொன்னாலும் “அதற்கான ஆதாரங்கள் இல்லை” என்று இவர்களே கூறுகிறார்கள், கேரளாவில் உள்ள மூன்று நர்சிங் மாணவிகள் ஒரு தீவிரவாதக் கும்பலால் மூளைச் சலவை செய்யப்படுகிறார்கள்.
அதை தொடர்ந்து தங்கள் கடவுள்கள் நல்லவர்கள் அல்ல, இஸ்லாம் மட்டுமே எல்லாவற்றிற்கும் தீர்வாக இருக்க முடியும் என்று நம்ப வைக்கப்படுக்கிறார்கள். வழிகாட்டும் ஒளி. காதல் மற்றும் பக்கச்சார்பான தர்க்கத்தால் ஈர்க்கப்பட்டு, பெண்கள் ஒரு கொடூரமான விளையாட்டில் சிக்கிக் கொள்கிறார்கள், அங்கு அவர்கள் நாகரிகங்களின் மோதலில் தீவனமாக மாறுகிறார்கள்.
சில வேதனையான தருணங்களைச் சந்திக்கிறார்கள். PK திரைப்படத்தில் போலி இந்துத்துவா மதவாதிகள் இளம்பெண்களை ஏமாற்றுவது போல காட்சிப்படுத்தப் பட்டது. இந்த திரைப்படத்தில் அதே போல போலி இஸ்லாமிய மதவாதிகள் இளம்பெண்களை ஏமாற்றி தீவிரவாதிகளாக மாற்றுவதாக கதை செல்கிறது.
இதற்கு இத்தனை போராட்டங்களும் தடைகளுமா என்று கேட்டால் தி காஷ்மீரி பைல்ஸ் படத்தைப் போல அல்லாமல் இது வரலாற்றுப் புனைவோ நிஜ கதையோ அல்ல எதற்காக ஒரு குறிப்பிட்ட மதத்தைக் கொண்டு வெறுப்புணர்ச்சியைப் பகிர வேண்டும் என்ற கேள்வி எழாமல் இல்லை.
ஒரு படைப்பாளியின் சுதந்திரம் என்ற பெயரில் இத்திரைப்படத்தில் இஸ்லாமியர்களையும் இந்து பெண்களையும் சேர்ந்தே இழிவு படுத்தப் படுகிறார்கள். பணத்திற்காக மோகம் கொள்ளும் பெண்களாய் தான் இந்து பெண்களும் சித்தரிக்கப் படுகிறார்கள்.
பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில், பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் “எதிர்மறையான அம்சங்களில் கவனம் செலுத்தாமல், உண்மையை வெளிக்கொணர்வதில்தான் எங்கள் கவனம் இருந்தது’ என்று சென் பகிர்ந்து கொண்டார்.
இத்திரைப்படத்தில் எது அவர் சொல்லவந்த உண்மை என்று தான் புரியவில்லை. ஒரு மதத்தையும் அதை நம்பும் மக்களையும் இழிவுபடுத்துவது மிகவும் தவறான ஒன்றாகும். இந்த திரைப்படத்தில் என்ன தான் சொல்ல வருகிறார்கள் என்று புரியவில்லை. முற்போக்குவாதிகளையும் புரட்சியாளர்களையும் இழிவு படுத்துவது போன்ற காட்சிகளும் நிறைய உள்ளன.
மதத்தைக் கொண்டு படம் தயாரித்தால் வரும் எதிர்மறையான விமர்சனங்களைக் கொண்டே படத்தை ஓட வைத்து விடலாம் என்று நினைக்கிறார்கள்.
கருத்து சுதந்திரத்திற்குத் தடை இருக்கக்கூடாது என்றால் இது கருத்தா என்பதே சந்தேகமாக உள்ளது.