திரைப்படம் என்பது பாமரர்களுக்கான பிரதான கேளிக்கை. அது காண்பவனில் ஏதேனும் ஒன்றை சப்தமின்றி நிகழ்த்தியிருக்க வேண்டும். அவனறியாது ஏதோ ஒரு உணர்வை தன்னிச்சையாய் அது அவனுள் புகுத்தியிருக்க வேண்டும். அப்படியான திரைபடங்களே அவனளவில் வெற்றி பெற்ற திரைப்படங்களாக கருதிடப் படும். இந்தத் திரை விமர்சனத்தில் இன்றும் நாம் அப்படியான, ஆனால் பெரும்பான்மையானவர்களால் கவனிக்கப்பட்டிருக்காத ஒரு அற்புதமான திரைப்படம் குறித்துக் காண்போம்.
தீனி ( தெலுங்கில் “நின்னிலா நின்னிலா”). அசோக் செல்வன், ரீது வர்மா, நித்யா மேனன், நாசர் ஆகியோர்களை பிரதான கதாப்பாத்திரங்களாகக் கொண்டு அனி ஐ.வி சசி இயக்கத்தில், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகிய ரொமாண்டிக் காமெடி வகையைச் சேர்ந்த திரைப்படம் தான் தீனி.
திரைப்படத்தின் தலைப்பு தெரிவிப்பதைப் போலவே, கதையின் மையமும், கதையின் மாந்தர்களும் ஒரு உணவகத்தையும், உணவையும் சுற்றியே பயணிக்கின்றனர்.
தேவ் ( அசோக் செல்வன்) – கலைந்த தலைமுடியும், முகம் நிறைய தாடியும், தொந்தியுமாய், காட்சியளிக்கும் போதும், பெரிதும் கவர்கிறார். எழுதி வைக்கப்பட்டிருக்கும் கட்டளைகளைத் தவிர்த்து, மனம் சொல்லும்படி சமைத்து அனைவரையும் கவரும் சமையற்கலைஞராய் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தேவ் மாயா, மற்றும் தேவ் தாரா ஆகிய இரு காதல்களிலும் அவருக்கே உண்டான நயத்தைக் காட்டி வெகுவாய் இரசிக்க வைக்கிறார். அவரின் தூக்கமின்மையும், அவரின் வித்தியாசப்பட்ட தசைப்பிடிப்பும் ஆர்வத்தைக் கூட்டியிருந்த போதும், அதற்கான காரணங்கள் அறிய வரும் போது ஏற்பட்டிடும் நெகிழ்ச்சி தவிர்க்க முடியாததாகிறது.
தாரா (ரீது வர்மா) – மனசுழற்சி நோயால் தவிக்கும், தன்னைச் சுற்றிய அனைத்தும் சரியாய் இருந்திட வேண்டும் என எண்ணும், கட்டளைகளைக் கச்சிதமாய் பின்பற்றும் பெண் சமையற்கலைஞர். இவர் தேவுடன் அந்த குளிர்பதன கிடங்கில் மாட்டிக் கொண்ட பின் அங்கு நிகழும் காட்சிகளும் காதலும் மனதிற்கு பெரும் இதம் அளிப்பவை.
மாயா (நித்யா மேனன்) – தேவுடன் சிறுவயது முதல் ஒன்றாய் வளரும் சுட்டிப்பெண். இவரைக் காணும் யார் மனதிலும், இப்படியான ஒரு அன்போ, தோழியோ நம் வாழ்வில் இல்லாமல் போய்விட்டதே என நிச்சயம் ஒரு கனம் எண்ண வைக்கும் வகையிலான அன்பின் பாத்திரம். மாயா வரத் துவங்கியதும் தான் திரைப்படம் அதன் அடுத்த பரிமாணத்தை எட்டுகிறது.
இவர்களுடன் தனது மனைவியையும் மகளையும் தொலைத்துவிட்ட உணவக உரிமையாளராக நாசர். அனைவரையும் ஒன்றிணைக்கும் வகையிலான அழகான திரைக்கதை.
இலண்டன் நகரமும், திரைப்படம் முழுக்க வியாபித்திருக்கும் அமைதியும் நிச்சயமாய் நம்மில் ஒரு வித ஏக்கத்தை ஏற்படுத்துவதை உணர முடிகிறது. பின்னனி இசை சரியான அளவில் அமைந்திருப்பது கூடுதல் பலம்.
காதல், மகிழ்ச்சி, சமையல் என அனைத்து சுவையின் அம்சங்களும் ஒன்றிணைந்த ஒரு விருந்து தான் தீனி. தீனி, கண்களுக்கு மட்டுமல்ல, மனதிற்கும்.
- சந்தீப் குமார்