பீட்சா என்றதுமே நம் நினைவுக்கு வரும் உணவகங்களுள் முதன்மையானது “டாமினோஸ்”.
உணவகத்துக்குச் சென்று உண்பது மற்றும் வீட்டிற்கே வந்து உணவை அளிப்பது போன்ற சேவைகளைப் புரிந்து வரும் டாமினோஸ் உணவகத்துக்கு, இந்தியாவின் 285 முக்கிய நகரங்களில் 1314 உணவகங்கள் இருப்பதோடு உலகின் பல முக்கிய நகரங்களிலும் கிளைகளைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஜூபிலண்ட் ஃபுட்வர்க்ஸ் லிமிட்டட் என்னும் பன்னாட்டு நிறுவனத்தின் உணவகமான டாமினோஸ் பெரும் ரசிகர் பட்டாளத்தையும், வாடிக்கையாளர்களையும் உலகெங்கிலும் கொண்டுள்ளது.
இந்நிலையில் அந்நிறுவனத்தின் 18 கோடி இந்திய வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டு இணையத்தில் கசிய விடப்பட்டுள்ளதாய் வெளியாகியுள்ள தகவல்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை வலைதள பாதுகாப்பு ஆராய்ச்சியாளரான திரு.ராஜசேகர் ராஜாரியா முதலில் கண்டறிந்து தெரியப்படுத்தி உள்ளார்.
இதனை உறுதிப்படுத்தியுள்ள ஜூபிலண்ட் ஃபுட்வர்க்ஸ் நிறுவனம் தகவல்கள் திருடப்பட்டுள்ளது உண்மை தான் என்றும், அது குறித்து சைபர் க்ரைமில் புகார் அளித்துள்ளதாகவும், மேலும் பன்னாட்டு துப்பறியும் நிறுவனம் ஒன்றைத் இந்தத் தகவல் திருட்டை விசாரிக்க நியமித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்தத் தகவல் திருட்டால் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் வங்கி அட்டைகள் குறித்தான தகவல்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லையென அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இப்பொழுது திருடப்பட்டு கசிந்துள்ள தகவல்களில் வெளியானதாக கருதப்படுவது வாடிக்கையாளர்களின் பெயர், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, முகவரி மற்றும் அவர்களின் ஜிபிஎஸ் கோ-ஆர்டினேட்ஸ் போன்ற தகவல்கள் ஆகும். இவை இணையத்தில் இலவசமாக உலா வருகிறது. இந்தத் தகவல்களின் மூலம் டாமினோசின் வாடிக்கையாளர்களை வேவு பார்க்க முடியும் எனக் கூறி அதிர்ச்சி அளிக்கிறார்கள் இணையதள வல்லுனர்கள்.
அனைத்தும் கணினி மயமாகிவிட்ட இந்தக் காலத்தில் நமக்கான பாதுகாப்பு என்றும் உறுதிப்படுத்தப்படாததே என்பதில் ஐயமில்லை.