திருவண்ணாமலையில் வருகிற 6-ந்தேதி கார்த்திகை தீபத் திருவிழா மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதனையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 24-ந்தேதி காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவம், தொடர்ந்து 25-ந்தேதி பிடாரி அம்மன் உற்சவம், நேற்று விநாயகர் உற்சவம் நடந்தது.
இன்று காலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடி மரத்தில் காலை 6.10 மணி அளவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷத்துடன் கொடியேற்றம் நடைபெற்றது.
முன்னதாக அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது.
கொடிமரத்தின் அருகே அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
இதனை தொடர்ந்து 10 நாட்கள் காலை, இரவு என இருவேளையில் சாமி மாடவீதி உலா நடைபெறுகின்றன.
வருகிற 30-ந்தேதி புதன்கிழமை வெள்ளி கற்பக விருட்சகம், வெள்ளி காமதேனு வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெற உள்ளன.
வருகிற 1-ந்தேதி வெள்ளி ரிஷப வாகனம், 2-ந்தேதி வெள்ளி தேரோட்டம் நடக்கிறது.
3-ந்தேதி மகா தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை முதல் இரவு வரை 5 தேர்களில் உற்சவர்கள் வலம் வருகின்றனர்.
ந்தேதி அதிகாலை 4 மணி அளவில் கோவில் சாமி சன்னதி அருகில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அன்று மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
கார்த்திகை தீபத் திருவிழாவில் சுமார் 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் பக்தர்களின் வசதிக்காக செய்யப்பட்டுள்ளன.
இன்று காலை நடைபெற்ற கொடியேற்று விழாவில் வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் பக்தர்கள் போலீஸ் கட்டுப்பாடு இல்லாமல் சாமி தரிசனம் செய்தனர்.
2 ஆண்டுகளுக்கு பிறகு கார்த்திகை தீப திருவிழாவில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.