தொழில்நுட்பத்திற்காய் வழங்கப்படும் உயரிய விருது – இங்கிலாந்து வாழ் தமிழர் சாதனை

செய்திகள்

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகளில் சிறப்பான பங்களிப்பை அளிப்பவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் விருதுகளில் உயர்ந்த விருதாய்க் கருதப்படும் மில்லினியம் டெக்னாலஜி – 2020ஆம் ஆண்டிற்கான விருது இங்கிலாந்து வாழ் தமிழ் விஞ்ஞானியான திரு. சங்கர் பாலசுப்ரமணியன் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படும் இவ்விருது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பின் மூலம் ஒரு சமுதாய மாற்றத்திற்கும், முன்னேற்றத்திற்கும் வழிவகுப்பவர்களுக்கு அளிக்கப்படுகிறது.

இந்த விருதானது பின்லாந்து நாட்டின் தொழில்நுட்பத் துறையால் வழங்கப்படுகிறது. பின்லாந்து நாட்டின் அதிபரான திரு. சாவுலி நினிசிடோ இந்த விருதை திரு. சங்கர் பாலசுப்ரமணியன் அவர்களுக்கு அளித்து கவுரவித்தார். இந்த விருதை திரு.சங்கர் பாலசுப்ரமணியனுடன் அவரின் தொழில்முறை கூட்டாளியான திரு.டேவிட் கிளெனர்மெனும் இணைந்துப் பெற்றனர். இவர்கள் இருவரும் இணைந்து சோலிக்சா என்னும் நிறுவனத்தை உருவாக்கி நடத்தி வருகின்றனர்.

இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வேதியியலாளராகவும் பேராசிரியராகவும் பணியாற்றி வரும் திரு. சங்கர் பாலசுப்ரமணியனின் சோலிக்சா நிறுவனம் “சோலிக்சா இல்லுமினா என்.ஜி.எஸ்” எனப்படும் மரபணு மூலக்கூறுகளை வரிசைப்படுத்தும் முறையைக் கண்டறிந்தமைக்காக இப்பரிசு வழங்கப்படுகிறது.

இவர்கள் கண்டறிந்துள்ள இந்த மரபணு மூலக்கூறுகளை வரிசைப்படுத்தும் முறையானது, வேகமானதாக இருப்பதோடு செலவு குறைந்ததாயும் இருப்பதே அதன் சிறப்பம்சமாய்க் காணப் படுகிறது. பத்தாண்டுகளில் ஒரு பில்லியன் டாலர் செலவழித்து 2000ஆம் ஆண்டும் மேற்கொள்ளப்பட்டிருந்த வரிசைமுறைப்படுத்துதல், இவர்களின் கண்டுபிடிப்பு மூலம் 1000 டாலர்கள் செலவில் ஒரே நாளில் நிகழ்த்திட முடிந்திடுகிறது. இது நம் வருங்காலத்தை மாற்றப் போகும் மாபெரும் கண்டுபிடிப்பாய்க் கருதப்படுவதாகவும், இந்த முறையைக் கொண்டே கொரோனா வைரசின் மரபணு மூலக்கூறுகளை எளிதில் கண்டறிந்து தடுப்பூசி தயாரிக்க முடிந்ததாகவும் தேர்வுக் குழுவைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வரிசைப்படுத்துதல் முறைமூலம் ஒவ்வொருவரிலும் கொரோனா தொற்றின் தாக்கம் என்ன ரீதியிலானதாக இருக்கிறது என்பதையும் கண்டறிய முடிகிறது. இது கொரோனாவுக்கு எதிரான இந்தப் போரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் கண்டுபிடிப்பாய் காணப்படுகிறது.

மில்லினியம் டெக்னாலஜி 2020 பரிசு வென்றவர்களுக்கு ஒரு மில்லியின் யூரோக்கள் பரிசாக அளிக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

  • சந்தீப் குமார்

Leave a Reply

Your email address will not be published.