கொத்தடிமை தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்றவும், தமிழகத்தை கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்கவும், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9ம் தேதி, கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினமாக அனுசரிக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தையொட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கையெழுத்து இயக்கத்தை நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் நேற்று தொடங்கி வைத்தார். மேலும், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கலைக்குழு பிரசாரத்தை, அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வாரம்தோறும் வியாழக்கிழமைகளில் கொத்தடிமை முறை இருக்கிறதா என்பது குறித்து, வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் கோழிப்பண்ணைகள், செங்கல் சூளைகள், நூற்பாலைகளில் சோதனை செய்து வருகிறோம்.
கோழிப்பண்ணை உரிமையாளர்கள் மத்தியில், வெளிமாநில தொழிலாளர்களை எந்த முறையில் கையாள வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு அதிகம் ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ஏற்பட்ட ஒரு சில கசப்பான சம்பவங்களால், அனைத்து கோழிப்பண்ணையாளர்களும் தற்போது வெளிமாநில தொழிலாளர்களை வேலைக்கு வைக்கும்போது, உரிய விதிமுறைகளை பின்பற்றுகிறார்கள்.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2017ம் ஆண்டு முதல் தற்போது வரை, கோழிப்பண்ணைகள், செங்கல் சூளைகள், நூற்பாலைகளில் கொத்தடிமைகளாக இருந்த 95 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 55 பேர் வெளி மாநில தொழிலாளர்கள். இவர்கள் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கொத்தடிமைகள் முறை ஒழிப்பிற்காக நாமக்கல் மாவட்டத்திற்கு விருது கிடைத்துள்ளது.