சர்வதேச கல்வியறிவு தினம் கொண்டாடப்படும் இன்று, இந்தியாவில் மாநில வாரியாக எழுத்தறிவு விகிதங்களின் பட்டியலில் கேரளா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது, தமிழகம் எட்டாவது இடத்திலும், ஆந்திரா கடைசி இடத்தில் உள்ளது.
1996ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 8ஆம் தேதி சர்வதேச கல்வியறிவு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தின் நோக்கம் உலகம் முழுவதும் கல்வியறிவை மேம்படுத்துவதாகும். தேசிய புள்ளிவிவர அலுவலகம் (என்எஸ்ஓ) சமீபத்தில் வெளியிட்ட ஆய்வில், இந்தியா அதன் கல்வியறிவு விகிதங்களில், அதாவது நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் எட்டியுள்ளது. சமீபத்திய கணக்கெடுப்பின்படி இந்தியாவின் ஒட்டுமொத்த கல்வியறிவு விகிதம் 77.7% ஆக உள்ளது.
கல்வியறிவு விகிதத்தைப் பொறுத்தவரை கேரளா நீண்டகாலமாக தனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டாலும், டெல்லி சிறப்பான முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது. இரண்டாவது இடத்திலுள்ள டெல்லியின் கல்வியறிவு விகிதம் 88.7 சதவீதமாகவும், உத்தரகண்ட் 87.6 ஆகவும், இமாச்சலத்தில் 86.6 சதவீதமாகவும் உள்ளது. 82.9 சதவீதத்துடன் தமிழகம் இந்த பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது. 66.4 சதவீதத்துடன் ஆந்திரா இந்த பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
ஒட்டுமொத்தமாக நாட்டில் பெண்களின் கல்வியறிவு விகிதம் 70.3% ஆகவும், ஆண்களின் கல்வியறிவு விகிதம் 84.7% ஆகவும் உள்ளது. அதுபோல நகர்ப்புற மக்களில் கல்வியறிவு விகிதம் ஒட்டுமொத்தமாக 87.7% ஆக இருந்தது, கிராமப்புற கல்வியறிவு விகிதம் 73.5%ஆக உள்ளது. நகர்ப்புறங்களில் கூட பெண்களின் கல்வியறிவு ஆண்களின் கல்வியறிவைவிட பின்தங்கியிருக்கிறது.
இந்த கல்வியறிவு கணக்கெடுப்பு என்எஸ்ஓ-வால் நடத்தப்பட்டது. 8,097 கிராமங்களைச் சேர்ந்த 64,519 கிராமப்புற குடும்பங்கள் மற்றும் 6,188 பகுதிகளைச் சேர்ந்த 49,238 நகர்ப்புற குடும்பங்களிடம் இந்தியா முழுவதும் ஒரு வருட காலப்பகுதியில் இந்த ஆய்வு செய்யப்பட்டது