ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் கைகளில் சென்றதில் இருந்தே அவர் பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதற்கிடையே இப்போது ட்விட்டரின் அறிவிப்பு ஒன்று இணையத்தில் கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. பிரபலமான மற்றும் முக்கிய புள்ளிகளுக்கு ப்ளூ டிக் வசதி இலவசமாக கொடுக்கப்படும். அவர்களை பயனாளர்கள் எளிதாக அடையாளம் கண்டு கொள்ளவே இந்த வசதி. ஆனால், இப்போது யார் வேண்டுமானாலும், கட்டணம் செலுத்தினால் ப்ளூ டிக் வசதி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சர்வதேச அளவிலும் கடும் எதிர்ப்பு வந்த போதிலும், எலான் மஸ்க் தனது முடிவில் உறுதியாக இருந்தார். இதனால் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
அதேநேரம் இப்போது சில அடிப்படை பாதுகாப்பு வசதிகள் கூட ப்ளூ டிக் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும் என்று ட்விட்டர் அறிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது வரும் மார்ச் 20ஆம் தேதி முதல், ட்விட்டர் பயனர்கள் சில அடிப்படையான பாதுகாப்பு அம்சத்திற்கு கூட மாதாந்திர கட்டணம் செலுத்த வேண்டும். இது ஆன்லைன் பாதுகாப்பு வல்லுநர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ப்ளூ டிக் கட்டணமாக 900 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், பலராலும் இந்த அடிப்படை பாதுகாப்பு அம்சத்தை கூட பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மஸ்க் கைகளில் சென்றவுடன் இதுபோன்ற அறிவிப்புகளை எதிர்பார்த்தே இருந்ததாகவும் ட்விட்டர் முன்னாள் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.