காஸாவில் பஞ்சத்தால் உயிர்பலி அபாயம் தொடர்வதாக உலக சுகாதாரஅமைப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல், ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு அக்.7-ஆம் தேதி போர் மூண்டது. இதனை தொடர்ந்து, 6 மாத காலமாக இஸ்ரேல்–காஸா இடையே போர் நடந்து வருகிறது. இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இஸ்ரேலுக்கு நிதி மற்றும் ஆயுத உதவி செய்துவரும் அமெரிக்காவே போர் நிறுத்தம் வேண்டும் எனக் கூறியுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 33 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, கடந்த சில வாரங்களாக அதிகளவிலான உணவுப் பொருள்கள் காஸாவுக்கு நிவாரணமாக அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும் காஸாவில் பஞ்சத்தின் அபாயம் இன்னும் நீங்கவில்லை என உலக சுகாதார அமைப்பின் பாலஸ்தீன பிரதிநிதி ரிக் பீப்பர்கார்ன் தெரிவித்துள்ளார்.
ஊட்டச்சத்து குறைபாடுடைய 5 வயதுக்கும் குறைவான 40 குழந்தைகள், கூடுதல் உடல்நலப் பிரச்னைகளோடு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 10 முதல் 14 கிலோ எடை இருக்க வேண்டிய 2 வயதுக் குழந்தைகள் வெறும் 4 கிலோ மட்டுமே இருப்பதாகவும், இந்த போருக்கு முன்பு அங்கு ஊட்டச்சத்து குறைபாடு பெரியளவில் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு குழந்தைகளிடம் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என பீப்பர்கார்ன் தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களில் ஊட்டச்சத்து குறைபாடுடைய 25 குழந்தைகள் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.