சுதா மூர்த்தி பத்ம விருது பெற்றது பெருமைக்குரிய தினம் என அவரது மருமகனான பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் சமீபத்தில் நடைபெற்றது. பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகளை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். பிரபல சமூக தொண்டு செயல்பாட்டாளரும், எழுத்தாளருமான சுதா மூர்த்திக்கு இந்த விழாவில் பத்ம பூஷண் வழங்கப்பட்டது. கர்நாடகாவைச் சேர்ந்த சுதா மூர்த்தி இந்த விருதை குடியரசு தலைவர் முர்முவிடம் பெற்றுக்கொண்டார்.
இவர் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி ஆவார். நாராயண மூர்த்தி-சுதா மூர்த்தி தம்பதியின் மகளான அக்ஷதா மூர்த்தியின் கணவர் பிரிட்டன் நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது தாயார் பத்ம பூஷண் விருது பெற்ற புகைப்படத்தை ரிஷி சுனக்கின் மனைவியும், சுதா மூர்த்தியின் மகளுமான அக்ஷதா மூர்த்தி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தனது சமூக பங்களிப்புக்காக குடியரசு தலைவர் கைகளில் இருந்து என தாயார் பத்ம பூஷண் விருது வாங்கியதை நான் பார்த்தேன் என குறிப்பிட்டுள்ளார்.