உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் தேர்வெழுதலாம் – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

அரசியல் இந்தியா உயர்கல்வி உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்க்கல்வி தமிழ்நாடு நிகழ்வுகள் மருத்துவம் முதன்மை செய்தி

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்கள் இந்தியாவில் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் காரணமாக உக்ரைன் நாட்டில் மருத்துவ படிப்பை மேற்கொள்வதற்காக சென்ற சுமார் 20,000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர். போர் இன்னும் நிறைவடையாத சூழலில் அவர்கள் தங்களது படிப்பினை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்கள் தங்கள் மருத்துவ கல்வியை இந்தியாவில் நிறைவு செய்ய அனுமதி அளிக்குமாறு கோரிக்கை வைத்து உச்சநீதிமன்றத்தில் ஏராளமான பொதுநல மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் விரிவாக விசாரிக்கப்பட்டு வந்தது. தொடர்ச்சியாக உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தை மனிதாபிமான அடிப்படையில் அரசு அணுக வேண்டும் என கருத்து கூறியிருந்தது. இருப்பினும் 20 ஆயிரம் மாணவர்களையும் இந்தியாவில் சேர்த்துக்கொள்வது என்பது நடைமுறை சாத்தியம் இல்லாதது என்று ஒன்றிய அரசு திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில், உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்கள் இந்தியாவில் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படுவதாக ஒன்றிய அரசு தெரிவித்திருக்கிறது. இந்த தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு இந்திய மருத்துவ பாடத்திட்டத்தின்படி எழுத்துத் தேர்வு நடத்தப்படும். இந்தியாவில் நடைபெறும் தேர்வில் வெற்றி பெறுவோர் 2 ஆண்டுகள் கட்டாயம் மருத்துவ பயிற்சி பெற வேண்டும்.
செய்முறை வகுப்புகள் ஒரு சில அரசு மருத்துவக் கல்லூரிகளில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். உக்ரைனில் படித்து இந்தியாவில் எந்த மருத்துவ கல்லூரியிலும் சேராத மாணவர்களுக்கு இறுதிவாய்ப்பு தரப்படும். உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள் பகுதி 1, 2 தேர்வுகளை எழுத வாய்ப்பு அளிக்கப்படும். எந்த மருத்துவ கல்லூரியிலும் சேராமல் மாணவர்கள் தேர்வு எழுதலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *