உலகத் தமிழர்களே உயிர் காத்திட உதவுங்கள் – தமிழக முதல்வர் வேண்டுகோள்

செய்திகள்

கடந்த டிசம்பர் 2019ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கோவிட் வைரஸ் பெருந்தொற்று, அதன் கோர தாண்டவத்தை இன்று வரையில் நிகழ்த்தி வருகிறது. இது வரையில் இலட்சோப இலட்சம் மக்களைக் கொன்று குவித்துள்ள இந்த வைரஸ் தொற்றின் தீவிரம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதன் காரணமாக இந்தியாவின் பல மாநிலங்களில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு மற்றும் சில மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவின் கோர முகம் தமிழகத்திலும் ஏறுமுகமாகவே காணப்படுகிறது. இந்நிலையில் புதிதாய் பொறுப்பேற்றுள்ள திரு.மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு போர்க்கால அடிப்படையில் கொரானா நிவாரண நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்காய் நிதி வேண்டி மக்களிடம் முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுக்கும் செய்தியறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை மிக மோசமான ரீதியில் இருப்பதாகவும், அதன் காரணமாய் மருத்துவ நெருக்கடி மற்றும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் ஊரடங்கால் முடங்கிய வாழ்வாதாரத்தையும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்க மருத்துவமனைகள், மருந்துகள், படுக்கைகள், பிராணவாயு மற்றும் தடுப்பூசி போன்ற உள்கட்டமைப்புகளை மேலும் மேம்படுத்த வேண்டி இருப்பதாகவும் இதற்காய் மக்கள் தாராளமாய் நிதியளித்து உதவிட வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் ” புலம் பெயர்ந்து சென்ற தமிழர்கள், தாய்த் தமிழகத்தை மறக்கவில்லை, மறக்க முடியாது என்பதன் அடையாளம் தான் இது போன்ற நிதி திரட்டு நிகழ்வு” எனக் கூறி NRI தமிழர்களிடமும் உயிர்களைக் காக்க நிதியளித்து உதவுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாய் தடுப்பூசி பற்றாக்குறையால் தேவையான தடுப்பூசிகளை தமிழக அரசே கொள்முதல் செய்வதற்கான ஆணைகளைக் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய அரசின் இது வரையிலான கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் நம்பிக்கை அளிக்கும் வகையிலேயே அமைந்துள்ளது.

தமிழக அரசுக்கு நிதியளிக்க

Acc. Number : 11720 10000 00070
Branch : secretariat branch, chennai-009
Ifsc: IOBA0001172
Swift code : IOBAINBB001

  • சந்தீப் குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *