போர் நடந்து வரும் உக்ரைனுக்கு மேலும் 3 பில்லியன் டாலர் வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே கடந்த 10 மாதங்களாக போர் நடந்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கான படைவீரர்கள் இருதரப்பிலும் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவாக உள்ளன. உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்குவதுடன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடையையும் விதித்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியும் வருகின்றன.
ரஷ்யாவை எதிர்த்து போரிட அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, போன்ற 30க்கும் மேற்பட்ட நாடுகள் ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. இந்நிலையில் உக்ரைனுக்கு மேலும் 3 பில்லியன் டாலர் அளவிலான ஆயுத உதவிகளை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த ராணுவ உதவி இதுவரை இல்லாத அளவிற்கு அதிகம் என்று கூறப்படும் நிலையில் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளும் வழங்கப்படுகிறது. இதுவரை சுமார் 24.9 பில்லியன் அமெரிக்க டாலர் வரை அமெரிக்கா, உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை செய்திருக்கிறது. இந்திய மதிப்பில் இது ரூ.20 லட்சம் கோடியாகும்.