நல்உள்ளப் பிள்ளைகள் அமைத்த கல்விப் பாலம், சான் ஆண்டோனியோ- இலுப்பைத்தோப்பு. தமிழர்கள் எங்கு சென்றாலும் தன் மண்ணையும் மக்களையும் அவர்களை இணைக்கும் தமிழையும் என்றும் மறப்பதில்லை. அமெரிக்க நகரங்களில் ஒன்றான சான் ஆண்டோனியோவில் வாழும் தமிழர்கள் இதற்கு விதிவிலக்கல்ல. தமிழ் மக்களை ஒன்றிணைப்பதற்கும் தங்கள் மொழி மற்றும் மரபை அடுத்த தலைமுறையினருக்கு கடத்தவும் தமிழ்ச் சங்கம் அமைத்து 27 வருடங்களாக தொடர்ந்து பங்காற்றி வருகிறார்கள். இவர்கள் தமிழகத்தில் வாழும் மக்களின் தேவைகளிலும் தொடர்ந்து பங்களித்து வருகிறார்கள். 2015ல் சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்ட போதும் 2018ல் கஜா புயல் தாக்கியபோதும் பேரிடர் நிவாரண பணிக்கு பொருள் உதவி செய்தார்கள். 2019ல் தஞ்சை மாவட்டத்தில் 14.8 ஏக்கர் பரப்பளவு உள்ள ஓர் ஏரியை தூர்வார விவாசிகளுக்கு தோள் கொடுத்தார்கள். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் 2022 – 2023 கல்வியாண்டில் ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள ஆம்பலாப்பட்டு கிராமத்தில் உள்ள இலுப்பைத்தோப்பு அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் எளிமையாக பேசுவதற்கான பயிற்சி துவங்கினார்கள். ஸ்மார்ட் கிளாஸ் ரூம் இணைப்பின் மூலம் அமெரிக்காவில் இருந்தபடியே 22 மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி அளித்தார்கள். இந்த முயற்சியின் சிறப்பு என்னவென்றால் இவ்வகுப்புகளை நடத்தியதும் மாணவர்களே. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து சான் ஆண்டோனியோ நகரத்தில் மேல்நிலை பள்ளியில் படிக்கும் 10 மாணவர்களும் அவர்களுக்கு உறுதுணையாக அவர்களின் பெற்றோர்களும் இணைந்து 60 வகுப்புகளை நடத்தினார்கள். இவ்வகுப்புகளின் மூலம் கல்வி கற்ற அனைத்து அரசு பள்ளி மாணவர்களும் தங்களது ஆங்கிலத் திறனை வெகுவாக வளர்த்துள்ளார்கள். இந்த முயற்சியை பற்றி பேசும் போது, இலுப்பைத்தோப்பு அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் திரு. கணேசன் அவர்கள் கூறியது “ஆங்கில மொழி பயிற்சியையும் தாண்டி இம்முயற்சி பள்ளி மாணவர்களுக்கு பெரும் நம்பிக்கையும் உத்வேகத்தையும் அளித்திருக்கிறது. எங்கள் கிராமத்திற்கும் சான் ஆண்டோனியோ நகரத்திற்கும் 11.5 மணி நேர வித்தியாசம் இருந்தாலும் மாணவர்களின் நலனை கருதி தங்களின் இரவு நேரத்தில் இப்பயிற்சியை அளித்த அனைத்து இளைஞர்களுக்கும் அவர்களுக்கு வழிகாட்டிய பெற்றோர்க்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்”. “12,000 கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும் தொழில்நுட்பம் சான் ஆண்டோனியோ வாழ் இளைஞர்களை கிராமத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுடன் இணைத்திருக்கிறது என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் கல்வி கற்ற காலங்களில் இந்த வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை. ஆங்கிலம் பல கதவுகளை திறக்கும் திறன் கொண்டது. இந்த வகுப்புகளில் பங்கேற்ற அனைத்து மாணவர்களும் தங்களின் மொழி திறமையை வெகுவாக வளர்த்திருக்கிறார்கள் என்பது எனக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம் இம்மாதிரியான முயற்சிகளை தொடர்ந்து செய்யும்” என்று சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத் தலைவர் அசோக் ஆண்டப்பன் கூறினார். “கிராமத்து மாணவர்களுடன் ஏற்பட்ட இந்த தொடர்பினால் அமெரிக்க வாழ் இளைஞர்கள் அவர்களின் தாய் மண், மக்கள், மற்றும் மொழியுடன் ஓர் ஆழ்ந்த உறவை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இந்த வாய்ப்பு அரசு பள்ளியில் படிக்கும் கிராமத்து குழந்தைகளுக்கு மட்டுமல்ல அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த எங்கள் பிள்ளைகளுக்கும் ஒரு பெரும் வரமாக அமைந்துள்ளது” என்று சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம் இளைஞர் அணி தலைவி வள்ளி விஜய் கூறினார். இந்த முயற்சியில் கலந்துகொண்ட சான் ஆண்டோனியோ வாழ் இளைஞர்கள்: சாய்வி அசோகன்,
லயா துமட்டிசந்திரசேகரன்,
சாதனா விஜய்,
தான்யா சுரேஷ்,
அவந்தி தரணி,
அமீதேஷ் தனுஷ்கோடி,
அஃகில் பாரூக்,
ஆஷிஷ் பாரூக்,
விஷால் விஜயகுமார்,
சந்திரபோஸ் செந்தில்குமார். கடந்த நான்கு மாதங்களாக சான் ஆண்டோனியோ தமிழ் சங்கம் நமது இலுப்பைத்தோப்பு மேல்நிலை பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதற்கான பயிற்சியளித்தது. அந்த நற்பணி முன்னெடுப்பு கடந்த செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வந்தது. மாணவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக தலைமை ஆசிரியர் முன்னிலையில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.