அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணம் பேர்பேக்ஸ் பகுதியில் உள்ள ஒரு தெருவிற்கு திருக்குறளை இவ்வுலகிற்கு அருளிய வள்ளுவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதுபற்றி அமெரிக்காவின் வெர்ஜினியா சபை உறுப்பினர் டான் ஹெல்மர் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டதாவது, “தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதியாக நிற்கையில் பெருமிதம் கொள்கிறேன். அமெரிக்காவில் முதன்முறையாக ஃபேர்பேக்ஸ் நகரில் உள்ள ஒரு தெருவிற்கு ‘வள்ளுவர் வே’ என்று வள்ளுவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த செய்தி தமிழர்கள் மத்தியிலும், வெளிநாட்டுவாழ் தமிழர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த அங்கீகாரம் வெர்ஜினியாவில் உள்ள வள்ளுவன் தமிழ் அகாடமி உறுப்பினர்களால் கிடைக்கப்பெற்றுள்ளது. வள்ளுவன் தமிழ் அகாடமி அமெரிக்காவில் உள்ள குழந்தைகளுக்கு தமிழ் மொழியை கற்பிப்பதற்காக தன்னார்வலர்களால் தொடங்கப்பட்ட நிறுவனமாகும். இந்த நிறுவனம் தமிழ் ஆசிரியர்களை கொண்டு வாராந்திர வகுப்புகள் மூலம் மாணவர்களுக்குத் தமிழைக் கற்றுக்கொடுத்து வருகிறது.
உலகப் பொதுமறை என போற்றப்படும் திருக்குறளை எழுதிய வள்ளுவருக்கு உலகம் முழுவதும் அங்கீகாரம் கிடைப்பது பெருமைக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.