உயிரினங்களில் அறிவு அதிகம் படைக்கப் பெற்றவன் மனிதன். அவன் பெற்றிருக்கும் அந்த உபரி அறிவே அவனின் அழிவுக்கும் காரணமாக அமைகிறது. மனிதனின் அறிவியல் முன்னேற்றங்கள் இயற்கையை சீண்டி பதம் பார்க்க, இயற்கை தன் பெருங்கோபத்தை மனிதனை நோக்கிக் காட்டத் துவங்கியுள்ளது. அதன் விளைவு கண்கூடாகத் தெரியத் துவங்கியுள்ளது.
உலக வெப்பமயமாதல் காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. இது வரையில் உலகின் அதிக வெப்பமான ஆண்டாக கருதப்பட்டு வந்த 2016 ஆம் ஆண்டை இந்த ஆண்டு ஈடுசெய்துள்ளது. உலகின் 23 நாடுகள், அவைகள் இதுவரையில் சந்தித்து வந்ததில் உச்சபட்ச வெப்பத்தை பதிவு செய்துள்ளன.
இதுவரை இந்த வெப்ப சலனத்திற்கு 485 பேர் கனடா நாட்டில் மட்டும் பலியாகியுள்ளனர். வெயிலின் தாக்கத்தால் மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். அந்நாடின் கொலம்பிய மாகாணத்தின் வெப்பநிலை 50 டிகிரியைத் தாண்டி பதிவாகியுள்ளது.
மேலும் கடந்த ஜூன் மாதம் பாகிஸ்தானில் அமைந்திருக்கு சிந்து மாகாணத்தின் ஜாகோபாத் நகரில் வெப்பத்தில் அளவு 52 டிகிரிகளாக பதிவாகியுள்ளதே இது வரையிலான உச்ச பட்ச வெப்பநிலையாக அறியப்படுகிறது. அதைத் தொடர்ந்த வேன்கோவர் நகரில் கடுமையான வெயிலின் தாக்கம் பதிவாகியுள்ளது. அமெரிக்காவில் வெயிலின் தாக்காத்தால் மின்கம்பிகள் மற்றும் தார்சாலைகள் உருகத் தொடங்கியுள்ளது அதிர்ச்சியூட்டுவதாக அமைந்திருக்கிறது.
உலகளவிலான அதிகபட்ச வெப்பநிலையாக அறியப்படுவது கலிபோர்னியாவில் பதியப்பட்ட 56 டிகிரிகளாகும். கடந்த ஏழு வருடங்களாக வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து மட்டுமே வருவதாக நாசா கவலை தெரிவித்து வரும் நிலையில், உலகளவிலான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கார்பன் வெளியீட்டைக் குறைக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.