அமெரிக்காவில் பணியாற்ற தேவையான, ‘ஹெச்1பி, எல்1’ உள்ளிட்ட ‘விசா’ கட்டணங்களை பல மடங்கு உயர்த்த, அதிபர் ஜோ பைடன் அரசு பரிந்துரை செய்துள்ளது.
கணினி மென்பொருள், தொழில்நுட்பம் உட்பட குறிப்பிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் அமெரிக்கா சென்று பணியாற்ற, ‘ஹெச்1பி’ விசா கட்டாயம் மற்றும் அந்நாட்டின் குடியேற்றத் துறை இந்த விசாவை வழங்குகிறது.
இதுபோல, இதர வேலை வாய்ப்புகளுக்காக பலவிதமான விசாக்களை அந்நாட்டு அரசு வழங்கி வருகிறது. தற்பொழுது இந்த விசாக்களுக்கான கட்டணங்களை பல மடங்கு உயர்த்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. ஹெச்1பி விசாவுக்கு விண்ணப்பிக்க தற்போது 37 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதை, 64 ஆயிரம் ரூபாயாக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதேபோல, எல்1 விசாவுக்கான கட்டணத்தை 37 ஆயிரத்தில் இருந்து, 1.13 லட்சம் ரூபாயாகவும், ஓ1 விசா கட்டணத்தை, 37 ஆயிரத்தில் இருந்து, 86 ஆயிரம் ரூபாயாக உயர்த்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இது போன்று கட்டண உயர்வுகள் குறித்து மக்கள் கருத்து கேட்ட பிறகே அமலுக்கு வரும். அதற்கு 60 நாட்கள் அவகாசமும் வழங்கப்படும்.
இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரும்பட்சத்தில், அமெரிக்கா பயணிப்பது என்பது பல மடங்கு விலை உயர்வானதாகி விடும்.