மலை கிராமத்துக்குள் சிறுத்தை புகுந்தது’, ‘யானைக்கூட்டத்தின் அட்டகாசத்தில் வாழைத்தோப்பு நாசம்’… காடுகளை ஒட்டிய கிராமங்களில் மட்டுமில்லை; வனங்களைத் தாண்டிய வறட்டுப் பகுதிகளிலும், நாம் எதிர்பார்க்காத இடங்களிலும்கூட இப்படிப்பட்ட சம்பவங்கள் நிகழ்கின்றன.
குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் இப்போது இவை அதிகரித்து விட்டன. சமீபத்தில் யானை ஒருவரைக் கொன்றே போட்டிருக்கிறது. ‘மலை கிராம மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக காடுகளை ஆக்கிரமித்து விவசாய நிலமாக்கிக் கொள்கிறார்கள். அதுதான் பிரச்னை’ என்கிறது அரசுத் தரப்பு.
‘‘இந்தக் காடு எங்க சாமிய்யா… நாங்க இதுக்கு காவல்! நாங்க இல்லாட்டி இதை எப்பவோ அழிச்சிருப்பாங்க’’ என ஆதங்கமும் கண்ணீருமாக வெடிக்கிறார்கள் அம்மக்கள். ‘‘ஆயிரக்கணக்கான வருஷங்களா இங்கேயே இருக்கிற ஜனங்க நாங்க. காடுதான் வாழ்க்கை… அதுதான் குலசாமி
விலங்குகளை ஊருக்குள்ள வர வைக்கிறது உண்மையில யாருன்னு எங்களுக்குத் தெரியும்!’’ எனத் துவங்குகிறார் நீலகிரி விவசாயத் தொழிலாளர்கள் முன்னேற்றச் சங்கத்தைச் சேர்ந்த எம்.எஸ்.செல்வராஜ். இருபத்தைந்து வருடங்களாக கூடலூரில் வசிப்பவர். தொடர்ந்து அங்குள்ள மக்களுக்காகக் குரல் கொடுத்து வருபவர்.
‘‘நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம் 5,500 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. இந்தியாவுல முதல்முதலா நிறுவப்பட்ட உயிர்க்கோள காப்பகம் இது. மலை உச்சிப் பகுதியில சோலை காடுகளும், அதுக்கு அடுத்து பசுமை மாறாக் காடுகளும், அடுத்தடுத்த நிலையில் இலையுதிர் காடுகள், புதர் காடுகள், புல்வெளிகள்னு வரிசையா அமைஞ்சிருக்கும்.
இது மாதிரி உலகத்துல வேறெங்கும் பார்க்க முடியாது. அதனாலதான் இதை பொக்கிஷம்னு யுனெஸ்கோ அமைப்பு சொல்லுது. இதன் உச்சிப்பகுதியில கோத்தர்கள்… அதுக்குக் கீழே குறும்பர், இருளர்கள், பனியர்கள், காட்டுநாயக்கர்கள், முள்குறும்பர்கள்னு பல பழங்குடிகள் வசிக்கிறாங்க. காடு வேற, இவங்க வேற இல்ல!
ஆங்கிலேய ஆட்சிக் காலத்துல வனத்துறை உருவாக்கப்பட்டுச்சு. இதன் நோக்கமே மரங்களை வெட்டுறதுதான். இங்க காலம் காலமா செழிச்சு வளர்ந்திருந்த ஈட்டி, அத்தி, வெண்தேக்கு, மலை வேம்புனு நம்ம மண் சார்ந்த மரங்களை அவங்க வெட்டி ஐரோப்பாவுக்கு அனுப்பிட்டாங்க. சுதந்திரத்திற்குப் பிறகு நம்ம ஆட்சியிலகூட இங்க பாரம்பரிய மரங்களை வளர்க்க நினைக்கலை.
தேக்கு, யூகலிப்டஸ், அகேசியா என டிம்பருக்கு பயன்படுற மரங்களா நட்டு வச்சுட்டாங்க. இது கூடவே உண்ணிச் செடிகளும், பார்த்தீனிய செடிகளும் வளர்ந்துருச்சு. இந்த மரங்கள் எல்லாமே சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானதுங்க. தேக்கு மரத்துக்குக் கீழ ஒரு புல் பூண்டு கூட வளராது. அது வெப்பத்தை உறிஞ்சி வெப்பத்தையே வெளியிடும். யூகலிப்டஸ் நிலத்தடி நீரை உறிஞ்சிடும். இந்த மர இலைகளை சிறு விலங்குகள் சாப்பிடாது.
இதனால, தாவர உண்ணிகளான மான், காட்டெருமை, முயல் இதெல்லாம் வேற பகுதிகளுக்குப் போயிடுச்சு. இதெல்லாம் இருந்தாத்தான் புலி அங்க வாழ முடியும். உணவுக்கு மற்ற விலங்குகள் இல்லாததாலதான் புலி ஊருக்குள்ள வர ஆரம்பிச்சிருச்சு. இதுக்கு நாங்க எப்படிப் பொறுப்பாக முடியும்?’’ என்கிறவர், அடுத்தடுத்தும் அதிர்ச்சித் தகவல்களை அடுக்குகிறார்.
‘‘முன்னாடியெல்லாம் யானைகள் ஊருக்குள்ள இரவு நேரங்கள்லதான் வரும். யாருக்கும் தொந்தரவு கொடுக்காது. ஆனா, இன்னைக்கு எந்த நேரம்னு சொல்ல முடியலை. அதுகிட்ட அகப்பட்டு நிறைய பேர் உசுரை விட்டாச்சு. இதுக்கு காரணம், மூங்கில் மரங்களை அழிச்சதுதான். இங்க 1500 வகையான மூங்கில்கள் இருக்கு. அதன் ஆயுட்காலம் 45 வருஷம். மூங்கிலை முத்தின பிறகுதான் வெட்டணும். அதுவும் வேரை விட்டுட்டு மேலே இருக்கற மூங்கிலை மட்டுமே வெட்டணும்.
அப்போதான், அடுத்தடுத்து அதிலிருந்து குருத்து நல்லா வளரும். ஆனா, பெரிய பேப்பர் கம்பெனிக்காரங்க வனத்துறைகிட்ட அனுமதி வாங்கிட்டு எல்லா மூங்கிலையும் அடியோடு சேர்த்து மொத்தமா வெட்டிட்டுப் போயிடுறாங்க. வனத்துறை இதை மறுபடி வளர்க்குறதில்ல. 2 ஆயிரம் சதுர கி.மீ அளவு இருந்த மூங்கில் வளம், இன்னைக்கு வெறும் 500 சதுர கி.மீ அளவுக்கு சுருங்கிப் போச்சு.
ஒரு யானை ஒரு நாளைக்கு 250 கிலோ முதல் 300 கிலோ வரை சாப்பிடும். நூறு யானை இருந்தா எவ்வளவு தேவைப்படும்? மூங்கில் இல்லாததால யானை கிராமத்துக்கு வந்து கரும்பு, நெல், வாழை, தென்னை, பலாப்பழம்னு எல்லாத்தையும் சாப்பிடுது. இதைத் தடுக்க ஆரம்பத்துல 3 கோடி ரூபாய் செலவிட்டு அகழி வெட்டினாங்க. ஆனா, அதை அகலமா தோண்டாம ஏதோ பேருக்கு செஞ்சிட்டாங்க. இதுக்குள்ளயே யானை இறங்கி ஏறி வருது. காட்டுக்குள்ளேயே விலங்குகள் வாழுற சூழல் இல்ல. அரசும் வனத்துறையும் அதைக் கெடுத்துட்டதுதான் எல்லாத்துக்கும் காரணம்.
2006ல வனவிலங்கு பாதுகாப்பு சட்டத் திருத்தத்தை அரசு கொண்டு வந்துச்சு. இதன்படி, அந்தந்த கிராமப் பஞ்சாயத்தைக் கேட்காம எதுவும் செய்யக் கூடாது. ஆனா, கிராம பஞ்சாயத்துகிட்ட இப்படி அதிகாரம் வந்ததை வனத்துறை அதிகாரிகளால சகிக்க முடியாததால, அந்தச் சட்டத்தையே சரியா அமல்படுத்த மாட்டேங்குறாங்க. பழங்குடிகளை வெளியேத்துறதுலயே குறியா இருக்காங்க.
புலியை ‘வேங்கை சாமி’ன்னு வணங்குறவங்க பழங்குடிகள். அவங்களால காட்டுக்கு எந்த பாதகமும் ஏற்படாது. இதை மத்த மக்களும், அரசும் புரிஞ்சுக்கணும். காட்டுக்குள்ள மிருகங்கள் வாழ்ற சூழ்நிலையை உருவாக்கி அவை வெளிவராம தடுக்கணும். பாரம்பரிய மரங்களையும், மூங்கிலையும் மறுபடி நட்டு இந்தக் காப்பகத்ைத மீட்டெடுக்கணும். அதுதான் இதுக்கு ஒரே தீர்வு’’ என்கிறார் அவர் முடிவாக!
ஒரு யானை ஒரு நாளைக்கு 250 கிலோ முதல் 300 கிலோ வரை சாப்பிடும். நூறு யானை இருந்தா எவ்வளவு தேவைப்படும்?
