காவல்துறையில் பெண்கள் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி சிறப்பு பதக்கம் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் உள்ள காவல்துறைகளில் தமிழ்நாடு காவல்துறை முக்கியமான ஒன்றாகவும், முன்னணியிலும் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு காவல்துறையில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. சட்டம் -ஒழுங்கு , புலனாய்வு, போக்குவரத்து, குற்றப்பிரிவு , சைபர் குற்றப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் உள்ளன.
இதன் அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறையில் மொத்தம் 1.20 லட்சத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் உள்ளனர். இதில் பெண் போலீசாரும் அடங்குவர்.
இந்தியாவில் உள்ள மாநிலங்களின் காவல்துறைகளிலேயே தமிழ்நாடு காவல்துறை பல சிறப்புகளை கொண்டது.
தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பான செயல்பாடுகளுக்காக கடந்த ஆண்டு ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு வழங்கப்படும் உயரிய கௌரவமான குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தற்போது காவல்துறையில் பெண் காவல்துறையினர் உள்ளனர். ஆனால் காவல்துறையில் 1973-ஆம் ஆண்டுதான் முதன்முதலில் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அப்போது ஒரு காவல் உதவி ஆய்வாளர், ஒரு தலைமைக் காவலர், 20 காவலர்கள் என மொத்தமாக 22 பெண்களே பணியில் சேர்ந்தனர்.
ஆனால் தற்போது 35,329 பெண் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பணியில் உள்ளனர். காவல்துறை பணியில் பெண்கள் சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதனை முன்னிட்டு கடந்த மார்ச் மாதம் பொன்விழா கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பெண் காவலர்களை பெருமைப்படுத்தும் விதமாக அவர்கள் அனைவருக்கும் சிறப்பு பதக்கம் வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
