சுகாதார அமைப்பில் மிக முக்கியமான நபர்கள் மருத்துவர்கள் என்று பலர் நினைக்கிறார்கள், ஆனால் இது மட்டுமே உண்மையல்ல. நோயாளிகளின் நலன், பாதுகாப்பு மற்றும் மீட்புக்குப் பொறுப்பானவர்களாக இருப்பதால், மருத்துவமனைகள் அனைத்திலும் செவிலியர்களும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
சர்வதேச செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 12 அன்று உலகளவில் செவிலியர்களின் சேவைகளைப் பாராட்டும் விதமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள் நவீன மருத்துவ சேவையின் நிறுவனர் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் ஆண்டு நிறைவாகவும் குறிக்கப்படுகிறது.
COVID-19 தொற்றால் மக்கள் பெருமளவில் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதால், ஒவ்வொரு நோயாளியையும் எல்லைகளைப் பொருட்படுத்தாமல் கவனித்துக்கொள்வதில் செவிலியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஒரு நோயாளிக்கு உடனடி கவனம் தேவைப்பட்டாலும் அல்லது ஊக்கமளிக்கும் சில சொற்கள் தேவைப்பட்டாலும் கூட, செவிலியர்கள் அவர்களைச் சுற்றிலும் இருக்கிறார்கள்.
உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி, 2030 க்குள் மேலும் 9 மில்லியன் செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் தேவைப்படுகிறார்கள், இதனால் அனைத்து நாடுகளும் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வில் நிலையான வளர்ச்சி இலக்கை அடைய முடியும்.
செவிலியர்கள் ஏராளமான அறிவையும், பலவிதமான திறன்களையும் கொண்டிருக்கிறார்கள். தீவிரமான மன அழுத்தத்தை உண்டாக்கும் வேலையின் ஒரு பகுதியாக இருந்தாலும் உறுதியான கடினமான சூழல்களில் சேவைகள் செய்கிறார்கள். செவிலியர்கள் உலகிற்கு புதிய வாழ்க்கையை கொண்டு வர உதவுகிறார்கள், நோய்வாய்ப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களை அயராது கவனித்துக்கொள்கிறார்கள்.
வீட்டை விட்டு வெளியேறவே நாம் அச்சப்படும் இந்த சூழ்நிலையில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து நமக்காக போராடும் செவிலியர்களுக்கு மீண்டும் தலைவணங்குகிறோம்!
-பிரியங்கா மோகனவேல்