தொலைக்காட்சி பெட்டிகளின் வருகைக்கு முன்னதான காலம் அப்போதெல்லாம் வானொலி பெட்டி கோலோச்சிய காலம் , அதுவே ஆகச்சிறந்த பொழுது போக்கும் கூட.
வானொலி மார்கோணி அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டு பல்வேறு நாடுகளின் மூலைமுடுக்குகளில் எல்லாம் பிரபலம் அடைந்திருக்கிறது.ஏன் இன்றளவும் புயல் , வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் தரைவழி ஒலிபரப்பு சேவைகளின் மூலமே தகவல் பரிமாற்றம் சாத்தியமாயிருக்கிறது.
ஆகாஷவாணி மாநில செய்திகள்
வாசிப்பவர் அந்த கணீர் குரலை
90 களிலும் அதற்கு முன்னர் பிறந்தவர்களும் வாழ்நாளில் ஒரு முறையேனும் கேட்டிருப்பார்கள். அகில இந்திய வானொலியில் தமிழ் ஒலிபரப்பு சேவை ஆகாஷவாணி என 1957 ஆம்
ஆண்டு ரவீந்திரநாத் தாகூர் அவர்களால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.அகில இந்திய வானொலி 1936 ஆம் வருடம் தனது முதலாவது ஒலிபரப்பு சேவையை துவங்கியது . இது முதன்மையான அரசுத்துறை வானொலியாகும். இது 24 இந்திய மொழிகள் , ஆங்கிலம் தவிர 15 உலக மொழிகளில் தன் சேவையை வழங்கி வருகிறது. உலக வானொலி தினமானது ஐக்கிய நாடுகளின் கல்வி , அறிவியல் , பண்பாட்டு நிறுவனத்தின் (UNESCO )உறுப்பு நாடுகளால் அதன் 36 வது கருத்தரங்கில் நவம்பர் 2011 இல் பரிந்துரை செய்யப்பட்டு , ஐக்கிய நாடுகளின் பொது சபை கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்டு 2012 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 13 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. வானொலி ஒலிபரப்பு சேவையை கொண்டாடவும் , வானொலி மூலமாக தகவல் பரிமாற்றத்தை ஊக்குவிக்கவும் , பன்னாட்டு வானொலியாளர்களிடையே கூட்டுறவை ஏற்படுத்தவும் கொண்டாடப்பட்டு வருகிறது. குறைந்த செலவில் தகவல்களை உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டுமென்பதே இதன் நோக்கமாகும்.
முந்தைய தலைமுறை மக்களுக்கு வானொலி பொழுது போக்கு என்பதையும் தாண்டி அது ஒரு வித அந்தஸ்தை பறைசாற்றுவதாகவே இருந்திருக்கிறது. இந்திய சுதந்திரம் அடைந்த செய்தி முதற்கொண்டு பல்வேறு முக்கிய தகவல்களை வானொலி மூலமாகவே அறிந்திருக்கிறார்கள். செய்திகள் மட்டுமல்லாது பக்தி பாடல்கள் , நேயர் விருப்பம் , உழவர் உலகம் , திரை விமர்சனம் , பாட்டுக்கு பாட்டு , மருத்துவ நேரம் , நாடக ஒலிச்சித்திரம் , கிரிக்கெட் வர்ணணை போன்றவற்றை கேட்டு மகிழ்திருக்கிறார்கள்.
என்ன தான் பண்பலை அலைவரிசைகள் கையடக்க கைப்பேசிகளில் வந்துவிட்டாலும் சென்னை , திருச்சி வானொலி நிலையங்களின் நிகழ்ச்சிகளுக்கும் , அதன் தொகுப்பாளர்களுக்கும் என பெரிய ரசிகர் பட்டாளமே இருந்திருக்கிறது. நவீன காலத்தின் வளர்ச்சிக்கேற்ப ஈடுசெய்ய இயலாமல் பல தரைவழி ஒலிபரப்பு தளங்கள் மூடு விழா கண்டபோதிலும் இன்றும் நாட்டின் மூலைமுடுக்குகளில் வானொலி இன்னும் கொண்டாடப்பட்டு கொண்டே தான் இருக்கிறது. சமகாலத்தின் சிறந்ததொரு பயன்பாட்டை நாமும் கொண்டாடி மகிழ்வோம்.