மலேசியா ஈப்போ மாநகரில் இரண்டாவது உலகத் தமிழ் இசை மாநாடு 2023

உலகம் மலேசியா

தடம் பதித்த தமிழிசை என்ற கருப்பொருளுடன்
மலேசியா, பேரா மாநிலம், ஈப்போ மாநகரில் இரண்டாவது உலகத் தமிழ் இசை மாநாடு அடுத்த மாதம் மார்ச்சு மாதம், 19 /03/2023 ஞாயிற்றுக்கிழமை
ஒரு நாள் மாநாடாக சிறப்பாக நடைபெற இருக்கிறது.

பழமைச் சிறப்பு மிக்க தமிழர் இனத்தின் இசை மரபும் மிகப் பழமை உடையதாகும். அனைத்து உயிர்களையும் வயப்படுத்துவது என்னும் பொருளில் இசை என்று பெயரிட்ட தமிழரின் நுண்ணறிவைப் பாராட்ட வேண்டும்.

தமிழ் இசை குறித்த இலக்கண நூல்கள் பல இருந்து அழிந்துவிட்டன. தொல்காப்பியத்தில் இசையைப் பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. 1800 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட நெஞ்சை அல்லும் சிலப்பதிகாரத்தில் பெருமளவான இசை மரபுச் செய்திகளை இளங்கோவடிகள் குறித்துள்ளார்.

மறைந்த நூலாகக் கருதப்பட்ட பஞ்சமரபு எனும் நூல் பிற்காலத்தில் கிடைக்கப் பெற்றது தமிழிசை மீட்பு முயற்சிக்கு இந்நூல் நல்வாய்ப்பாக அமைந்துள்ளது. பத்திமை இலக்கிய காலப் படைப்புகளான தேவாரப் பாடல்கள் தமிழிசைப் பண்களின் காப்புப் பெட்டகமாக அமைந்துள்ளன என்றால் மிகையாகாது.

இடைக்காலத்திலும் அதன் பிறகு பிற்காலத்திலும் தமிழிசை மீட்புப் பணியில் தமிழ் நாட்டு பண்ணாராய்ச்சிப் பாவாணர் குடந்தை சுந்தரேசனார், வீ.ப.க.அழகனார், முத்தமிழ்க்காவலர் கி.ஆ. பெ. விசுவநாதம்,
பன் மொழிப் புலவர் கா.அப்பாதுரையார், பெரியார், அரச வயவர் அண்ணாமலைச் செட்டியார் முதலான அறிஞர்களும் தலைவர்களும் பெரிதும் உழைத்தனர்.

நூற்றாண்டுக்கு முன் கடந்த 1917 – ஆம் ஆண்டு வெளிவந்த ஆபிரகாம் பண்டிதர் அவர்களால் எழுதப்பெற்ற கருணாமிர்த சாகரம் எனும் நூல் தற்கால மிகப்பெரிய இசைக்கருவூலமாய் நமக்குக் கிடைத்துள்ளது. அரிய கருவூலமாக திகழும் இந்நூல் புதிய வடிவத்தில்
மறுபதிப்பாக வெளிவந்துள்ளது.
நமது நாட்டிலும்
தமிழ் பெரியார்
தமிழ்த்திரு. திருமாவளவன் போன்றோரின் முயற்சியால் இந்நூல் வெளியீடு கண்டது குறிப்பிடத் தக்கது.

முன்பு காலத்தில் மலையகம் என்று வழங்கப்பட்ட மலேசியாவிலும் முத்தமிழ் என்ற
இயல், இசை, நாடகம்
அன்று தொடங்கி இன்று வரை வளர்ச்சி கண்டு வருகிறது. அதன் வளர்ச்சிக்கு பங்காற்றிய குறிப்பிட்ட சிலர்:

இசைத்துறையில்
பன்முக கலைஞர் மெல்லிசை மன்னர் ரெ. சண்முகம்,
குழல் குப்புசாமி,
நீலமேகம், அங்கப்பன், சுதந்தரம், இராமையா, வாசன், இசைத் தென்றல் மாரியப்பன்

நாடகத் துறையில்
ஆழி அருள்தாசன்,
ஜி. எஸ். மணியம், கே. எஸ். மணியம், கா. முருகன் போன்றோர்.

நாட்டிய துறைக்கென்று பரதநாட்டிய சபா உள்ளது.

மலேசியாவில் இயல, இசை, நாடக துறை வளர்ச்சிக்கு மற்ற அமைப்புகளுடன் தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கம் அளப்பரிய பங்களிப்பு செய்து வருகிறது.

காலந்தோறும்
இயல், இசை, நாடக வளர்ச்சிக்கு
அறிஞர்கள், மட்டுமின்றி பல்வேறு துறையினரின் கடும் உழைப்பால் தமிழ் இசை மீண்டும் பெரிதும் மிளிரவும் மீளவும் தமிழகம் மட்டுமின்றி மலேசியாவிலும் வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்து வருங்கால இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டியது நமது கடமையாகும்.

சிறப்புக்குரிய தமிழ் இசைக் கலையைத் தமிழ் மக்களின் வாழ்வோடு இசை இரண்டறக் கலந்து இருந்ததை தொல்காப்பியமும் சங்க நூல்களும் காட்டுகின்றன. யாழினையும் பறையையும் தொல்காப்பியர் குறித்துள்ளார்.

தொல்காப்பியர் காலத்திலேயே இசையையும் கூத்தையும் துணையாகக் கொண்டு வாழ்வு நடத்திய கலைத்துறையினர் தனிப் பிரிவாக இயங்கினர் என்பதனை ஆற்றுப்படை இலக்கணத்தின் காணலாம். சங்க இலக்கியங்களில் இசைக்கருவிகள், பண்கள் இசைவாணர்கள் பற்றிய எண்ணற்ற செய்திகள் இடம் பெறுகின்றன. மலைச்சாரல் உள்ள தினைப்புனத்தில் யானை ஒன்று தினை உண்ண மறந்து நின்றது. இதற்குக் காரணம் குறப்பெண் பாடிய குறிஞ்சிப் பண் ஆகும்.

எனவே இப்பெரும் சிறப்புக்குரிய இசைக் கலையை வளரும் தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் வகையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கவிஞர் டாக்டர் அருள் ஆறுமுகம் கண்ணன் அவர்களைத் தலைவராகக் கொண்டு தமிழர், தமிழ் மொழி, மக்களின் கலைப் பண்பாட்டோடு இணைந்திருக்கும் ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்ற ஏற்பாட்டில், ஈப்போ வெற்றி தமிழர் பேரமைப்பு ஆதரவில் வருகின்ற 19/03/2023 – ஆம் நாளன்று உலகெங்கும் உள்ள தமிழ் இசை வல்லுநர்களை ஒன்றிணைத்து இரண்டாவது உலகத் தமிழ் இசை மாநாடு 2023 – ல் நடத்துகிறது.

மாநாடு நடைபெறும் நாளன்று பாரம்பரிய இசைக் கருவிகளின் கண்காட்சி கூடமும்

தமிழ் இசை தொடர்பான ஆவண குறும்படம் திரையீடும் நிகழ்வுறும்.
மேலும் இம்மாநாட்டில் மாநாட்டு மலர் வெளிடப்படும்.

உலகத் தமிழ் இசை மாநாடு குறித்த தெரிவலைத் தெரிந்துகொள்ள மாநாட்டுத் தலைவர் கவிஞர் டாக்டர் அருள் ஆறுமுகம்,

கைப்பேசி எண்.
012 – 500 6161 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளவும்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ள
கோலாலும்பூரில் இருந்து ஈப்போவுக்கு சென்றுவர பேருந்துக்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலதிக தகவலுக்கு

019- 3243253.
திரு. அரசேந்திரன்

Leave a Reply

Your email address will not be published.