உலகின் சிறந்த விமான நிலையமாக தோஹாவின் ஹமாத் சர்வதேச விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பல வருடங்களாக உலகின் சிறந்த விமான நிலையம் என்ற அந்தஸ்தை தக்க வைத்திருந்த சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் அந்த அந்தஸ்தை இழந்திருக்கிறது. தற்போது இது உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த விமானத் துறை ஆலோசனை நிறுவனமான Skytrax நேற்று (17 ஏப்ரல்) ஜெர்மனியின் பிராங்ஃபர்ட்டில் (Frankfurt) நடந்த நிகழ்ச்சியில் இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், தோஹாவின் ஹமாத் இன்டர்நேஷனல் விமான நிலையம் (கத்தார்) முதல் இடத்திலும், சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
சிங்கப்பூரின் சாங்கி இரண்டாவது இடத்தில் வந்தாலும் ஆசியாவின் தலைசிறந்த விமான நிலையமாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் சாங்கி விமான நிலையம் உலகிலேயே சிறந்த குடிநுழைவுச் சேவைகளை வழங்கும் விமான நிலையமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
முதல் பட்டியலில் நான்கு இந்திய விமான நிலையங்கள் மட்டுமே இடம் பிடித்துள்ளன. டெல்லி விமான நிலையம் பட்டியலில் 36 வது இடத்தைப் பிடித்துள்ளது. அதே நேரத்தில் மும்பை விமான நிலையம் 95 வது இடத்தில் உள்ளது. பெங்களூரு விமான நிலையம் 59 வது இடத்தில் உள்ளது. ஹைதராபாத் விமான நிலையம் 61 வது இடத்துக்கு உயர்ந்துள்ளது.
