அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு மையம், GSK தயாரிக்கும், Arexvy என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை அங்கீகரித்துள்ளது.
கோவிட் தொற்றால் உலகமே பாதிக்கப்பட்ட பிறகு, சுவாசப் பிரச்சனைகள் என்றாலே கொஞ்சம் கூடுதலாக அச்சம் கொள்ள நேரிடுகிறது. வைரஸ் தோற்றால் சளி, நுரையீரல் தொற்று, சுவாசப் பிரச்சனைகள் என்று நுரையீரல் சார்ந்த பல விதமான நோய்கள் ஏற்படும். இதில் மிகவும் ஆபத்தானது என்று கூறப்படுவது respiratory syncytial virus, அதாவது சுவாசப் பாதையை பாதிக்கும் வைரஸ் தொற்று.
இது RSV என்று பரவலாக அறியப்படுகிறது. இந்த தொற்றைத் தடுக்கும் விதமாக, உலகில் முதல் முறையாக சுவாச நுண்குழல் அழற்சி தடுப்பூசியை மூன்று கட்ட கிளினிக்கல் சோதனை முயற்சிக்குப் பின் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு மையம், GSK தயாரிக்கும், Arexvy என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை அங்கீகரித்துள்ளது. பொதுவான வைரஸ் தொற்று போல, இந்த rsv வைரஸ் தொற்றும் சாதாரண சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உண்டாக்கும். இது மிகவும் சாதாரண தொற்று போல தெரிந்தாலும், வயது முதிர்ந்த நபர்களை தீவிரமாக பாதிக்கலாம்.
நேச்சர் ஜர்னலில் வெளியான செய்தியின் படி, 60 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு இந்த தடுப்பூசி வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில், ஆண்டு தோறும் கிட்டத்தட்ட 6,௦௦௦ முதல் 10,௦௦௦ நபர்கள் வரை இந்த வைரஸ் தொற்றால் இறக்கிறார்கள். மேலும், நுரையீரலை பாதிக்கக் கூடிய தீவிரமான நோய்த்தொற்றுகளில் இதுவும் ஒன்று. இதனால் ஆஸ்துமா, இதய செயலிழப்பு, பல்மோனரி நோய் உள்ளிட்ட இணை நோய்களின் பாதிப்பு தீவிரமாகும் அபாயம் இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் என்ற ஜர்னலில் வெளியான கிளினிக்கல் சோதனை தரவின் அடிப்படையில், இந்தத் தடுப்பூசி செலுத்திக் கொள்வதால், 60 வயதுக்கும் மேல் இருப்பவர்களுக்கு RSVஆல் ஏற்படும் நுரையீரல் தொற்று நோய் பாதிப்புகள் 82.6% வரை குறையும் என்றும், நோய் தீவிரமாகும் ஆபத்து 94.1% வரை குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, கீழ் சுவாசக் குழாய்த் தொற்று ஏற்படும் ஆபத்து வெகுவாகக் குறையும்.