யாக்கை மரபு அறக்கட்டளையானது கடந்த ஐந்து வருடங்களாக தமிழகத்தில் தொல்லியல் சார்ந்த பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வருகின்றது. வெவ்வேறு இடங்களில் தொல்லியல் சார்ந்து பயணிக்கும் தன்னார்வலர்களுடன் இணைந்து பாறை ஓவியங்கள், நடுகற்கள், கல்வெட்டுகள் ஆகியவற்றை தமிழகம் முழுவதிலும் இருந்து ஆவணப்படுத்தி வருகின்றது. மரபு சின்னங்கள் உள்ள ஒவ்வொரு இடத்திலும் உள்ளூர் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோருடன் உரையாடல் நிகழ்த்துவதன் மூலம் அங்குள்ள தொல்லியல் சின்னங்களின் முக்கியத்துவம் குறித்தும் அவை வெளிப்படுத்தும் செய்திகள் அவற்றைப் பாதுகாப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது. பல்வேறு கருத்தரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்பித்து தொடர்ச்சியாக செயல்பட்டும் வருகின்றது.
தமிழகத்தின் வரலாற்று கட்டமைப்பில் சாமானிய மக்களின் அரசியல் சமூக பொருளாதார நிலைகள் குறித்த பார்வையை முழுமையாக அளிப்பது நடுகல் கல்வெட்டுகள் தான் எனும் போது அவற்றை முழுமையாக தொகுப்பதும், அவற்றை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும், முதன்மை நோக்கமாக கொண்டு யாக்கை மரபு தன்னார்வ அமைப்பு பணியாற்றி வருகின்றது. இதுவரையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடுகல் கல்வெட்டுகளை ஆவணப்படுத்தியிருக்கும் யாக்கை குழு. அவற்றைப் நோக்கில் yaakkai.org.in என்ற இணையத்தளம் துவங்கி அதில் ப பொதுவெளிப்படுத்தும் திவேற்றம் செய்யும் பணியினைச் செய்து வருகின்றது. மேலும் அவற்றை பாதுகாப்பது பற்றியதான விழிப்புணர்வை மக்களிடையே பரவலாக்கம் செய்யும் நோக்கில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் ஆகியோருடன் இணைந்து நமது யாக்கை மரபு அறக்கட்டளை சென்னையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி முதல் 22 தேதி வரையில் “தமிழக நடுகல் மரபு கண்காட்சியும் ஆய்வுரைகளும்” எனும் தலைப்பில் தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த 42 நடுகல் கல்வெட்டுகளின் படங்கள், கல்வெட்டு வாசகம், சுருக்க விளக்கம் அடங்கிய தரவுகள் “ஃபோம் போர்டு” பலகையில் அச்சு செய்யப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டது.
தமிழகத்தில் முதன்முறையாக முப்பரிமாண வடிவத்தில் நடுகல் மாதிரி ஒன்றும் இக்கண்காட்சியில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
பின்னர் கடந்த நவம்பர் 16 முதல் 19வரையில் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இதே கண்காட்சியினை மாணவர்களுக்கான பிரத்யேக பயிலரங்குடன் நடத்தி முடித்தோம். இப்போது உலக மரபு வாரத்தை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் கடந்த நவம்பர் 19ஆம் தேதி முதல் வரும் 25ஆம் தேதி வரையில் காலை 10 முதல் மாலை 5 மணி வரையில் இக்கண்காட்சி நடைபெற்று வருகின்றது. நவம்பர் 19ஆம் தேதி மாலை இக்கண்காட்சியினை மாண்புமிகு தொல்லியல் துறை அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மாண்புமிகு பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்களும், மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.அனீஷ் சேகர் இ.ஆ.ப, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை ஆணையர் (மு.கூ.பொ) முனைவர் இரா.சிவானந்தம், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக இயக்குனர் திரு சுந்தர் கணேசன், பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலர் முனைவர் சாந்தலிங்கம் மற்றும் யாக்கை மரபு அறக்கட்டளையின் தலைவர் திரு சுதாகர் நல்லியப்பன் ஆகியோர் கலந்துக்கொண்டு உரையாற்றினர்.
இதுவரை இக்கண்காட்சியினை 8000த்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.