காந்தாரா என்றால் மாயவனம். ரிஷப் ஷெட்டி இயக்கி டபுள் ஆக்ஷனில் நடித்துள்ள இந்த படத்தின் கதை என்னவென்றால், நிம்மதி இல்லாமல் அலையும் அரசன் ஒரு பழங்குடியின மக்கள் வழிபடும் தெய்வத்தின் சிலை கண்டதும் நிம்மதியடைய அந்த மக்களுக்கு தனது நிலத்தின் பெரும்பகுதியை எழுதிக் கொடுக்கிறார். ஆனால், அதன் பின்னர் சில காலம் கழித்து மன்னனின் வம்சாவளி வந்த ஒருவர் மக்களிடத்தில் இருந்து அதை பிடுங்க நினைக்கிறார்.
பூத கோல நடனம் ஆடும் அப்பா ரிஷப் ஷெட்டியின் மீது அந்த சிறு தெய்வத்தின் அருள் வந்து இறங்கியது போல நடனமாடி அப்போ, இதுவரை நான் கொடுத்த நிம்மதியை திருப்பிக் கொடுக்க முடியுமா? என கேட்கிறது. மேலும், தானமாக வழங்கிய நிலத்தை மீண்டும் கேட்கும் நீ ரத்தம் கக்கி சாவாய் என சாபமிட, அதே போல அந்த அரச வம்சாவளி வந்தவர் இறக்கிறார். அதன் பின்னர் நிலம் அந்த பழங்குடியின மக்களுக்கே சொந்தமாகிறது.
அதன் பிறகு 20 ஆண்டுகள் கழித்து, 1990 காலக்கட்டம் என காட்டப்படுகிறது. பூர்வக்குடி மக்களை வன அதிகாரிகள் உதவியுடன் அரசு அங்கிருந்து அப்புறப்படுத்த நினைக்கிறது. ஆனால், அதை எதிர்த்து அந்த பூதகோல நடனமாடியவரின் மகன் ஹீரோ சிவா (ரிஷப் ஷெட்டி) எப்படி போராடுகிறார் என்பது தான் இந்த காந்தாரா படத்தின் ஒட்டுமொத்த கதையே.
காந்தாரா திரைப்படம் கன்னட திரையுலகில் கலெக்ஷனை அள்ளிய நிலையில், தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது. கேஜிஎஃப் படத்தை தயாரித்து ஹம்பலே தயாரிப்பு நிறுவனம் வெறும் 16 கோடி பட்ஜெட்டில் இப்படியொரு தரமான படத்தை கொடுக்க முடியும் என நிரூபித்துள்ளது. சாமி ஆடும் காட்சிகள் எல்லாம் பேய் படம் பார்க்கும் எஃபெக்ட்டை இசையமைப்பாளர் அஜனீஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் அரவிந்த் எஸ் காஷ்யப் கொடுத்துள்ளது படத்தை வேறு தளத்திற்கே கொண்டு சென்றுவிட்டது. ஆதிக்குடிகளின் வாழ்க்கையை சில ஆதயத்திற்காக மாற்ற அரசு ஏன் முயற்சிக்க வேண்டும்? அவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் உரிமை எந்த அரசுக்கும் இல்லை என ஆணித்தரமாக வசனங்கள் மூலமும் காட்சிகள் மூலமாகவும் கிளைமேக்ஸில் நாயகன் ரிஷப் ஷெட்டி நடித்துள்ள விதம் தான் அனைவரையும் படத்தை பார்க்க தூண்டுகிறது.