இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் ‘வரலாற்றுச் சிறப்புமிக்கது’ – ட்ரம்ப் கருத்து.

செய்திகள்

இந்தியாவுடன் அமெரிக்கா செய்துள்ள புதிய வர்த்தக ஒப்பந்தம் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்கா நிலக்கரி ஏற்றுமதியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.அவர் கூறியதாவது: “எங்கள் தலைமையிலான ஆட்சியில் அமெரிக்கா உலகில் மிகப்பெரிய எரிசக்தி ஏற்றுமதி நாடாக வளர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களில் ஜப்பான், கொரியா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் செய்து, நிலக்கரி ஏற்றுமதியை உயர்த்தியுள்ளோம். நமது நிலக்கரியின் தரமே இதற்குக் காரணம். இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது” என்றார்.முன்னதாக, இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத இறக்குமதி வரி விதித்திருந்தது. தற்போது இரு நாடுகளுக்கும் இடையில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு ஏற்பட்டதால், இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட வரி 18 சதவீதமாக குறைக்கப்படுவதாக ட்ரம்ப் அறிவித்தார்.அதே நேரத்தில், அமெரிக்காவிலிருந்து 500 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை வாங்க இந்தியா உறுதி அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.இந்த ஒப்பந்த விவரங்கள் கடந்த திங்கள்கிழமை வெளியிடப்பட்டபோது சில குழப்பங்கள் ஏற்பட்டன. இந்தியாவை அமெரிக்காவிடம் மோடி அரசு ‘விற்றுவிட்டது’ என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ஆனால், 24 மணி நேரத்திற்குள் அந்த ஒப்பந்தத்தில் உள்ள சில அம்சங்களை அமெரிக்கா திருத்தியது.இரு நாடுகளுக்கிடையேயான இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் மேலும் சில சலுகைகள் சேர்க்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்தியாவின் கோரிக்கைப்படி முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அனைத்து அம்சங்களும் இறுதி செய்யப்பட்ட பிறகு, இந்த ஒப்பந்தம் மார்ச் மாதத்தில் கையெழுத்தாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *